இலங்கையில் தொடர்குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கடும் கண்டனர் தெரிவித்துள்ளது. இகுறித்து ஒருங்கிணைப்பாளர்கள் அருணன், உதயக்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை அன்று கொழும்பு, பாடிகோலா, நெகோம்போ ஆகிய இடங்களில் உள்ள திருச்சபைகள், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்புகளில் பயங்கரவாதிகள் நடத்திய மனிதவெடிகுண்டுதாக்குதல்களில் 360க்கும் மேற்பட்ட ஆண், பெண், குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். மனித குலத்திற்கு எதிரான இந்தக்கொடூரச் சம்பவம் மனிதநேயமுள்ளோர் அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கும், சொல்லொணா துயரத்திற்கும் ஆளாக்கியிருக்கிறது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை தனது கடும்கண்டனத்தையும், வேதனையையும், இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆழ்ந்த
அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
இலங்கையின் ஒரு சிறுபான்மை மதத்தவரைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள இந்தக் கொலைபாதகச் செயலை செய்தவர் எந்த மதத்தவராயினும் கடும் தண்டனைக்கு ஆளாக்கப்படவேண்டும். படுகொலைகளைத் தடுக்கத் தவறியஇலங்கை அரசு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதிலாகிலும் தனது கடமையை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டும். குறுகிய அரசியல் நோக்கில் விஷயத்தைக் கையாளக் கூடாது.
பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்பதுதான் இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிற மதத்தவரை கொலை செய்யுமாறு எந்த மதமும் சொல்வதில்லை. இதைச் செய்வதெல்லாம்
மதப் போர்வை போர்த்திக் கொண்டுஅலையும் வெறியர்களே. அவர்கள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை அநியாயமாகப் பயன்படுத்துகிறார்கள். இதில் சம்பந்தப்பட்ட கொலைபாதகர்களை, அவர்களின் பயங்கரவாத அமைப்புகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக அவர்கள் சார்ந்த மதத்தையோ, அந்த மதத்தைப் பின்பற்றுவோரையோ பழிக்குஆட்படுத்தக் கூடாது. அது மதவெறியர்களுக்கே உதவும். அப்படிச் செய்யும் வேலை இலங்கையில் நடப்பதாக தெரிகிறது. அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். மேலும் இந்தக் கொலைவெறி ஆட்டத்தின் பின்னணியில் சர்வதேச சதி இருக்கலாம் எனும் சந்தேகமும் வலுத்து வருகிறது. அதையும் கண்டுபிடித்து அம்பலப்படுத்த வேண்டியது இலங்கை அரசின் கடமை.
இந்தியாவிலும் சில விஷம சக்திகள் இந்தப் படுகொகளைப் பயன்படுத்தி சிறுபான்மை மதத்தவர் மீது வெறுப்புணர்வை விசிறிவிடப் பார்க்கின்றன, அதற்கு யாரும் இரையாகி விடக்கூடாது. மத நல்லிணக்கமே அனைத்து வகைமத வெறியர்களையும் தனிமைப்படுத்தும் என்பதை மனதில் கொண்டு மக்கள் ஒற்றுமையைப் பேணுமாறு அனைவரையும் மேடை உரிமையோடு கேட்டுக் கொள்கிறது.