tamilnadu

பாஜகவையும் கூட்டாளிகளையும் வீழ்த்துவதே முதற்கடமை படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் வேண்டுகோள்

சென்னை, ஏப். 16-பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் வீழ்த்துவதே தமிழக வாக்காளர்களின் முதற்கடமை என தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகள், கல்வி யாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் உள்ளிட்டோரை அங்கமாகக் கொண்டிருக்கும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வேண்டுகோள் விடுத்துள்ளது. நடைபெற்றுக்கொண்டிருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் (2019) நமது தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதாகும். மத்தியில் ஆள்கிற பாஜக நமது தேசத்தின் மதச்சார்பின்மைக் கட்டுமானத்தைத் தகர்த்தெறி கிற வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறது. குடிமக்களுக்கு சாதி, சமூகம், மதம், வட்டாரம், மொழி என்ற பாகுபாடுகளின்றி சம உரிமைகளை உறுதிப்படுத்தும் நமது அரசமைப்பு சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு இது ஒரு மெய்யான அச்சுறுத்தலாகும்.கடந்த ஐந்தாண்டு காலத்தில் நமது சகோதரர்கள் மதம், சாதி, பாலினம் இன்ன பிறவற்றின் பெயரால் அவமதிக்கப்பட்டதையும் தாக்கப்பட்டதையும் கொல்லப் பட்டதையும் பார்த்தோம்.


அமைதியை நாடும் குடிமக்கள் தங்கள் எதிர்ப்புக் குரலை எழுப்பினால் வெறுப்பரசியலால் பிளவுபடுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப்படுத்தப் படுகிறார்கள், தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தப்படு கிறார்கள். நாட்டின் பிரதமரே தீய உள்நோக்கங்களுடன் மதவாதக் கண்ணோட்டத்தில் பேசுகிறார்.மதம், சாதி, பண்பாடு, வட்டாரம்,மொழி என்ற பலவகையான பிரிவுகள் நம்மிடையே இருந்தாலும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக நாம் ஒன்றுபட்டிருக்கிறோம். ஆனால் மத்திய ஆளுங்கட்சி யினர் மக்களைப் பிரித்தாள விரும்புகிறார்கள், தங்களது வெறித்தனமான செயல்களால்தலித்துகளையும் சிறுபான்மையின ரையும் முற்போக்கு எண்ணம் கொண்டோரையும் புறந்தள்ளத் துடிக்கிறார்கள்.ஆளுங்கட்சியின் பாரபட்சமான அணுகுமுறைகளால் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த இந்திய மக்கள், குறிப்பாகத் தமிழக மக்கள், எண்ணற்ற சோதனைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.


இந்நேரத்தில் தேவைப்படுவது இணக்கமிகு சமுதாயத்தைக் கட்டுவதற்காக மதம், சாதி, பண்பாடு, சமூகம், அரசியல் மற்றும் சித்தாந்த வேறுபாடுகள் மீதானசகிப்புடைமையை அடிப்படை யாகக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமைதான். நாட்டைச் சூழும் வகுப்புவாத அபாயத்தை முறியடிக்க வேண்டுமானால் மத்தியஆட்சியிலிருந்து பாஜக அரசைஅகற்றுவது உடனடிப் பணி யாகிறது.இதில் எடுத்துவைக்கிற ஒரு முதலடியாக, பாஜக மற்றும் அதன் கூட்டாளிகளை வீழ்த்துவதற்கும், மதச்சார்பற்ற ஜனநாயக அரசைக் கொண்டுவருவதற்கும் ஏற்ப வாக்களிக்குமாறு குடிமக்கள் அனைவரையும் வேண்டுகிறோம் என மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில், டி.எம்.கிருஷ்ணா, பேரா.வசந்தி தேவி, பிரண்ட்லைன் ஆசிரியர் விஜய் சங்கர், மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் கள் பேரா.அருணன், க.உதய குமார் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட சிந்தனையாளர்கள் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

;