tamilnadu

img

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது

சென்னை,மார்ச் 8- தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் மீதான விவாதம் நான்கு நாட்கள் நடைபெற்றது. இதன் பின்னர் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தவும்  நிதி ஒதுக்க ஒப்புதல் அளிக்கவும், சட்டசபைக் கூட்டம் திங்களன்று (மார்ச் 9) தொடங்குகிறது. முதல் நாளில் திருவொற்றியூர் எம்எல்ஏ கே.பி.பி.சாமி, குடியாத்தம்  எம்எல்ஏ காத்தவ ராயன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுகிறது.  முன்னாள் கல்வி அமைச்சர் க.அன்பழகன் மறைவுக்கும் சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் 11 ஆம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது. அன்று முதல் தினமும் துறை வாரியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடக்க உள்ளது.  குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பு பணிகளை நடத்தக்கூடாது, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆளும் கட்சி தரப்பில் இன்னமும் பதில் இல்லை. இதனால், இந்த கூட்டத் தொடரில் இந்த விவகாரம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

;