சென்னை:
16 ஆவது சட்டப்பேரவையின் கூட்டத்தொடரை தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி நடத்திவைத்தார். பேரவை பதிவேட்டில் முதல் கையெப்பமிட்டார். முன்னதாக அவருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
மு.க.ஸ்டாலின்
ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றுக் கொண்டாலும், சட்டப்பேரவையில் உறுப்பினராக பதவியேற்பு உறுதிமொழி எடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் முதல் நபராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
தொடர்ந்து மூத்த அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், என வரிசையாக அமைச்சர்கள் பதவியேற்றனர்.
இடதுசாரிகள்...
16வது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கந்தர்வகோட்டை சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தளி தொகுதியில் வெற்றிபெற்ற டி.ராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி மாரிமுத்து ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழியும் பதவியேற்பும் எடுத்துக்கொண்டனர்.
கைதட்டி வரவேற்பு...
ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவைக்கு முதன்முறையாக முதலமைச்சராக காலடி எடுத்து வைத்ததும் ஆளும் கட்சி மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கைதட்டி வரவேற்பு கொடுத்தனர்.
பாரம்பரிய உடையில்...
உதகமண்டலம் தொகுதி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கணேஷ் படுகர் இனத்தைச் சார்ந்தவர் என்பதால், அவர் சார்ந்த இனத்தின் பாரம்பரிய உடையை அணிந்து சட்டப்பேரவையில் பதவியேற்கவுள்ளார். முந்தைய தேர்தலின் போதும் அவர் இதே தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக சட்டசபைக்குள் நுழைந்த போதும் பாரம்பரிய உடையில் வந்தது குறிப்பிடத்தக்கது.
கடவுள் அறிய...
ஆளும் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் உலமாறா உறுதிமொழி ஏற்ற நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி கடவுள் அறிய எனக் கூறி உறுதி மொழி ஏற்றார்.
அவரைத் தொடர்ந்து முன்னாள் பேரவைத் தலைவர் ப.தனபால், துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், கே.சி.கருப்பண்ணன், காமராஜ், எம்.எஸ்.எம்.ஆனந்தன், திண்டுக்கல் சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், தங்கமணி, தமிழரசி, தளவாய்சுந்தரம், செ.தாமோதரன், நத்தம் ஆர்.விஸ்வநாதன், ஓ.எஸ்.மணியன், கே.பி.முனுசாமி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்.