tamilnadu

img

தமிழில் தேர்வு :இஸ்ரோ பரிசீலனை- சு. வெங்கடேசன் எம் பி கடிதத்திற்கு பதில்

இஸ்ரோவில் எதிர்காலங்களில் மாநில மொழிகளிலும் தேர்வுகளை நடத்த வழிகாட்டல் கேட்கப்பட்டுள்ளது. பிட்டர், வெல்டர், தேர்வுகளில் தமிழ் கேள்விதாள் இல்லையே என்று எம்.பி சு.வெங்கடேசன் கடிதத்திற்கு இஸ்ரோ உந்தும வளாக இயக்குநர் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி அளித்துள்ள செய்திகுறிப்பில்,

தமிழகத்தில் இயங்கி வரும் விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாகம் (ISRO Propulsion Complex) இரண்டு பணி நியமன அறிவிக்கைகளை ( IPRC/RMT/2019/3/22.09.2019 & IPRC/ RMT/ 2019/2 ) வெளியிட்டு எழுத்துத் தேர்வுகளையும் கடந்த 10.04.2022 அன்று சென்னையிலும், நாகர்கோவிலிலும் நடத்தியது.

அது "சி" பிரிவு, "பி" பிரிவு பதவிகளுக்கான நியமனத் தேர்வுகள் ஆகும். அவை அனைத்துமே சாதாரண நிலையில் இருந்து பணியாற்றும் ஊழியர்களுக்கானதே. ஆனால் எழுத்துத் தேர்வில் இலகுரக வாகன ஓட்டுநர், சமையலர் பதவிகளுக்கான கேள்வித் தாள்களில் மட்டுமே தமிழ் வடிவமும் இடம் பெற்றிருந்தது. மற்ற பதவிகளுக்கான தேர்வு கேள்வித் தாள்கள் இந்தி/ ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. பொருத்துபவர் (Fitter), பற்ற வைப்பவர் (Welder) போன்ற பதவிகளும் அதில் அடக்கம்.

பெரும்பாலான தேர்வர்கள் ஐ.டி.ஐ பட்டயப் படிப்பு முடித்தவர்களே. தமிழ் வழிக் கல்வியில் வந்தவர்கள். ஒடுக்கப்பட்ட சமூகங்களை சார்ந்தவர்கள்.

எனவே தமிழ் வடிவக் கேள்வித்தாளுடன் மறு தேர்வை நடத்த வேண்டுமென 20.04.2022 அன்று விண்வெளி ஆராய்ச்சி உந்தும வளாக இயக்குனருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.

அதற்கு IPRC/DR/RMT/01/ 06.05.2022 தேதியிட்டு பதிலளித்துள்ள அந்நிறுவனத்தின் இயக்குனர் டி. அழகுவேலு தேர்வு குறித்த கருத்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, இக்கோரிக்கை சம்பந்தமாக விண்வெளித் துறைக்கு பிரிவு "பி" மற்றும் "சி" பதவிகளுக்கான தேர்வுகளை ஆங்கிலம், இந்தி மட்டுமின்றி மாநில மொழிகளிலும் எதிர்கால நியமனங்களில் நடத்த வழிகாட்டல் கேட்டு எழுதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்கால தேர்வுகள் பற்றிய பதில் மகிழ்ச்சிதான். நடந்து முடிந்த தேர்வில் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு நியாயம் கிட்ட வேண்டுமே என்ற கேள்வி இன்னும் எஞ்சி நிற்கிறது.என அதில் அவர் தெரிவித்துள்ளார்.