tamilnadu

img

தமிழகத்திற்குரிய காவிரி நீரை மாதவாரியாக பெறுவதற்கு நடவடிக்கை எடுத்திடுக.... அரசுக்கு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சென்னை:
கர்நாடகத்திடமிருந்து தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்கு மாதவாரியாக தண்ணீர் வருவதை உத்தரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு உரிய காலத்தில் தண்ணீர்  திறக்கப்பட்டு வேளாண்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சம்பா சாகுபடிக்கான பணிகளும் துவங்கியுள்ளன. இந்த நிலையில் காவிரி தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பின் அடிப்படையில் ஜுன் மாதம் 9.19 டி.எம்.சியும் ஜுலை மாதம் 31.24 டி.எம்.சி. தண்ணீரும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு வந்திருக்க வேண்டும்.

ஆனால், ஜுன் மாதம் 6.22 டி.எம்.சியும் ஜுலை மாதம் இறுதி வரை 10.92 டி.எம்.சி. மட்டுமே வந்துள்ளது. இந்த இரண்டு மாதத்தில் மட்டும் 23.29 டி.எம்.சி பாக்கி தண்ணீர் வர வேண்டியுள்ளது. கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும் அணைகள் நிரம்பி வழியும் நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிடுவது என்ற கர்நாடகத்தின் போக்கு தொடர்கிறது. தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு மாதவாரியாக தண்ணீரைப் பெறவில்லை என்றால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், சம்பா சாகுபடிக்கு போதுமான தண்ணீரின்றி தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

காவிரி மேலாண்மை ஆணையம் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குரிய தண்ணீரைப் பெற்றுத் தருவதற்கும், தீர்ப்பை செயல்படுத்துவதற்குரிய முறையில் செயல்பட வேண்டும். மாறாக, பெயரளவில் கூடிக்கலையும் ஒரு கமிட்டியாக செயல்படுவது வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.மத்திய பாஜக அரசுடன் நட்புறவு பேணுவதற்கு காரணமே தமிழக நலன்களுக்காகத்தான் என்று சொல்லும் அதிமுக, காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை பெறுவதற்கு அந்த நட்பை எந்த வகையில் பயன்படுத்தியது? அல்லது கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது என்பதனால் தமிழக நலனை அதிமுக அரசு காவு கொடுத்துவிட்டதா என்பதை அதிமுக தலைமை தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது இத்தகைய சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழக விவசாயிகள் சம்பா சாகுபடியை நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் வகையில் கர்நாடகத்திடமிருந்து தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குரிய பாக்கி தண்ணீரை பெறுவதற்கும் மாதவாரியாக தண்ணீர் வருவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;