நில அளவையர்களின் 48 மணி நேர காத்திருப்பு போராட்டம் தொடங்கியது
சென்னை, அக். 7 - புல உதவியாளர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வலியுறுத்தி சென்னையில் 48 மணி நேர காத்திருப்பு போராட்டத்தை நில அளவையர்கள் தொடங்கினர். நில அளவைத்துறையில் ஏற்படும் நவீனமயமாக்கல் மற்றும் புற ஆதார முறையில் லைசன்ஸ் சர்வேயர் மற்றும் புல உதவியாளர்கள் பணி நியமனம் போன்ற நடவடிக்கைகளால் துறையின் நலனும் ஊழியர்களின் உரிமைகளும் பாதிக்கப்படுகிறது. எனவே, இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதலில் மனித சக்திக்கு மீறிய இலக்கை குறைக்க வேண்டும், நில அளவர்களாக ஒருமுறை தரம் இறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் தரம் உயர்த்த வேண்டும். பதவி உயர்வுக்கு தகுதி பெற்றும், பணியிடம் இல்லாததால் பதவி உயர்வு பெற முடியாதவர்களை, 2025ஆம் ஆண்டு பதவி உயர்வு தேர்வுப் பட்டியலில் இணைக்க வேண்டும். நில அளவர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். தனியார் முறையின் கீழ் ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற அளவர்களை நியமிப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும், புற ஆதார, ஒப்பந்த முறையில் புல உதவியாளர்களை நியமிப்பதை கைவிட்டு காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள நிலஅளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு இந்த போராட்டம் தொடங்கியது. தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் ச.டானியல் ஜெயசிங் தொடங்கி வைத்தார். ஒன்றிப்பின் பொதுச்செயலாளர் அண்ணா குபேரன், பொருளாளர் ஸ்டேன்லி, நிர்வாகிகள் பேபி, கல்பனா, சதீஷ், சக்திவேல், முருகேசன், தருமராஜ், செந்தில்முருகன், தட்சிணாமூர்த்தி, சரவணன், சென்னை மாவட்ட நிர்வாகிகள் ரவி, பிரியா, வருண் உள்ளிட்டோர் பேசினர்.
 
                                    