tamilnadu

img

உணவு பாதுகாப்புச் சட்டத்தில் இணைக்கக் கோரி போராட்டம்... மாற்றுத்திறனாளிகள் அறிவிப்பு

சென்னை:
விவசாய விரோத அவசர சட்டங்களை திரும்பப்பெறக் கோரியும் நீதிமன்ற அறிவுறுத் தல்படி உணவுப்பாதுகாப்பு சட்டத்தில்  மாற்றுத்திறனாளிகளையும் இணைக்கக்கோரியும் செப்-26 மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த மாற்றுத்திறனாளிகள் முடிவு செய்துள்ளனர்.இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் பா. ஜான்ஸிராணி, பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, இந்திய விவசாயத்தை நிர்மூலமாக்கும் விதத்திலும், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல கோடிக் கணக்கான ஏழை எளிய மக்களின் உணவு பெறும் உரிமையை நாசமாக்கும் விதத்தில் பன் னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விவசாயத்தைத் தாரைவார்க்கும் மூன்று அவசர சட்டங்களை தானடித்த மூப்பாக, நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறைகளை மீறி நிறைவேற்றி உள்ளதை எமது சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 
இந்த அவசர சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துவதுடன், இந்த நாசகர சட்டங்களை எதிர்த்து தேசபக்தி உணர்வுடன் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தும் அமைப்புகளுக்கு ஒருமைப் பாட்டை தெரிவித்துக்கொள்கிறது.

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் 
மாற்றுத்திறனாளிகளின் உணவு உரிமையை உறுதி செய்திட, சட்டத்தில் தானாக உள்ளடக்கும் விதத்தில்(automatic inclusion) தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம்(2013) இயற்றிய காலத்திலேயே எமது சங்கம் வலியுறுத்தியதோடு, இயக்கமும் நடத்தியது. ஆனால், மத்திய அரசு இக்கோரிக்கையை நிராகரித்தது.சமீபத்தில் இது தொடர்பான ஒரு வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம், உணவு உரிமையை உறுதிப்படுத்தும் விதத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இச்சட்டத்தின்கீழ் இணைத்திட மத்திய அரசை நிர்பந்தித்துள்ளது.  மத்திய அரசு செய்யாவிடில், நீதிமன்றம் உத்தரவிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.  ஆனால், கண்துடைப்பிற்காக தற்போது ஒரு நிர்வாக உத்தரவை மட்டும் பிறப்பித்துள்ளது. இது பயனளிக்காது.  நீதிமன்ற அறிவுறுத்தலின்படி இப்போதாவது, மத்திய அரசு உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைக்க உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை எமது சங்கம் வலியுறுத்துகிறது.

இந்த இரு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆங்காங்கே வாய்ப்புள்ள அனைத்து இடங்களிலும் மாற்றுத் திறனாளிகளை திரட்டி சக்தியான போராட்டங்களை நடத்திட சங்கத்தின் அனைத்து மட்ட கிளைகளையும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க மாநில தலைமை அறைகூவி அழைக்கிறது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

;