tamilnadu

அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டம்.. இரா. முத்தரசன்....

சென்னை:
கியூபா நாட்டையும் மகத்தான புரட்சியையும் தொடர்ந்து சீர்குலைத்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகம் முன்பு நடைபெறும் கூட்டு ஆர்ப்பாட் டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கியூபா நாட்டையும்  மகத்தான அதன் புரட்சியையும் அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது. அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளை மீறி கல்வியில், மருத்துவத்தில் மகத்தான சாதனைகள், வேளாண்துறையில் தற்சார்பு, தன்னிறைவு என நிலைகுலையாமல் சோஷலிச கியூபா முன்னேறுகிறது. கியூபா மீதான தடையை நீக்குக என ஐநா சபை பலமுறை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றியது.இந்தியா போன்ற உலகின் ஜனநாயக நாடுகள் கியூபா மீது பொருளாதார தடையை நீக்குக என பலமுறை கேட்டுக் கொண்டது. எதற்கும் மதிப்பளிக்காமல் கியூபாவை சீர் குலைக்க, அழித்தொழிக்க அமெரிக்க ஏகாதிபத்தியம் துடிக்கிறது. அப்பட்டமாக கியூபாவின் உள் விவகாரங்களில் தலையிடுகிறது.
இச்சூழலில் இந்தியாவின் நட்பு நாடாம் கியூபாவிற்கு ஒருமைப்பாட்டை தெரிவிக்கும் விதமாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டிக்கும் ஜூலை 29 அன்று சென்னையில் அமெரிக்க தூதரகம் முன் சிபிஐ, சிபிஐ(எம்), விடுதலை சிறுத்தைகள், சிபிஐ (எம்எல் லிபரேஷன்) ஆகிய கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த போராட்டத்தில் தோழர்களும், பொதுமக்களும் கொரோனா கால விதிமுறைகளை கடைபிடித்து முககவசம் அணிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

;