புதுக்கோட்டை, ஏப்.23- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்தவர் தா.ராஜதுரை. மாற்றுத்திறனாளியான இவர்கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை நிமித்தமாக திருச்சி வந்தார்.மீண்டும் திருச்சியிலிருந்து ஆரணி செல்வதற்காக ஒரு அரசுப் பேருந்தில் ஏறினார். பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இருக்கையை தனக்கு ஒதுக்கித் தருமாறு நடத்துனரிடம் கூறியுள்ளார். அதற்கு இருக்கை வழங்காததோடு மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் அவதூறாகப் பேசி கீழே தள்ளியுள்ளார்.மறுநாள் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பேருந்து நிலையத்தில் இதுகுறித்து மேற்படி நடத்துனர் சுதாகர் பாண்டியிடம், மாற்றுத்திறனாளிகளுக்கென்று உரிய இருக்கை வழங்க வேண்டுமென அரசு ஆணை இருந்தும் எங்களை ஏன் கீழே தள்ளி விட்டீர்கள்’ என பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு உங்களால் என்ன செய்ய முடியும் என்றும் மாற்றுத் திறனாளிகளின் ஊனம் குறித்தும் கேவலமாக மீண்டும் அதிகார தோரணையில் பேசியதாக மாற்றுத்திறனாளிகள் கூறுகின்றனர்.மேற்படி பேருந்து புதுக்கோட்டை அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமானது எனத் தெரிய வந்தது. இதனால் மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை புதுக்கோட்டை போக்குவரத்துப் பணிமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.போராட்டத்திற்கு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.சரவணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் க.சண்முகம், பொருளாளர் பாஸ்கர், திருவண்ணாமலை மாவட்டத் தலைவர் சி.ரமேஷ்பாபு, பொருளாளர் சத்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.