சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு அக்.26 அன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை, அக்.24- திருச்செந்தூரில் அக்டோபர் 27-ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெறுவதையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும், பெங்களூருவில் இருந்தும் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னை, சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து அக்டோபர் 26-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருச்செந்தூருக்கும், அக்டோபர் 27-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து மேற்கண்ட இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொதுமக்கள் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து வெள்ளியன்று திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 365 பேருந்துகளும்,சனிக்கிழமையன்று 445 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமையில் திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்க ளூரு ஆகிய இடங்களுக்கு 120 பேருந்து களும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் பல்வேறு இடங்களுக்கு 200 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 40 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும். அக்.26-ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.