tamilnadu

img

சிறப்பு வேளாண் மண்டல மசோதா: சட்ட அமைச்சர் விளக்கம்

சென்னை:
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட காவிரி ஆற்றுப்படுகை மண்டலத்திலுள்ள வேளாண் நிலங்களைப் பாதுகாப்பதற்கான சட்ட மசோதா மீது எதிர்க் கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. இதற்கு சட்டத்துறை அமைச்சர் நீண்ட விளக்கத்தை அளித்தார். அதன் சுருக்கம் வருமாறு:-

கேஸ் என்பது மத்திய பட்டிலில் வருகிறது. எனவே, குஜராத் சம்பவத்தில் அம்மாநில அரசு நிறைவேற்றிய தீர்மானம் செல்லாது என்று நீதிமன்றம் சொன்னது. ஆனால், தமிழ்நாட்டில் விவசாயம் என்பது மத்திய அரசின் 7வது அட்டவணை மாநிலப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. அதாவது விவசாயம், விவசாயம் சார்ந்த கல்வி, பூச்சிக் கொல்லி இவை அனைத்தும் முழுக்க முழுக்க மாநிலத்தின் அதிகாரத்திற்குட்பட்டது என்பதை தெளிவாக விளக்கியிருக்கிறது.நமது அனைவரது நோக்கமும் ஹைட்ரோ கார்பன் போன்ற விவசாயத்தை பாதிக்கும் எந்த ஒரு திட்டங்களும் வரக்கூடாது என்பதாகும். அதை நேரடியாக இந்த சட்டத்தில் சேர்த்தால் அது மத்திய அரசின் சட்டத்தோடு நேரடியாக மோதுகின்ற ஒரு நிலையை உருவாக்கும். ஆகவேதான், காவிரி டெல்டா பகுதியில் உள்ள நிலத்தை விவசாயத்திற்காக பாதுகாக்கப்பட வேண்டும். அதை மேம்படுத்தப்பட வேண்டும்.  விவசாயத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்ளலாம் என்பதை இணைத்திருக்கிறோம். எனவே, இந்த சட்டத்தை நிறைவேற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரமும் இருக்கிறது. ஆகவே, எந்த நிலையிலும் சந்தேகப்படவேண்டாம். அச்சப்படவேண்டாம்.

381 எண்ணைக் கிணறு இருக்கிறது என்பது உண்மை. இந்த எண்ணைக் கிணறு என்பது இன்றோ நேற்றோ வந்ததல்ல. 1958 ஆம் ஆண்டில் முதன் முதலாக காவிரி டெல்டா பகுதியில் ஆய்வுகள் தொடங்கப்பட்டது. அதன்பிறகு, 1985 ஆம் ஆண்டில் நரிமண் பகுதியில் எண்ணைக்கிணறு அமைத்து உற்பத்தி துவங்கப்பட்டது. ஆனால், இந்த பெட்ரோல், கேஸ் எடுப்பதால் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது என்று கடந்த 30 ஆண்டு காலமாக எந்த போராட்டமும் நடக்கவில்லை. தற்போது வரைக்கும் 31 உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் திமுக ஆட்சியில் 16, அதிமுக ஆட்சியில் 15. இப்போது இயங்கிக்கொண்டிருப்பது 16 மட்டுமே. அதில் 14 மட்டுமே உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

எண்ணைக் கிணறு என்பது வேறு, ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது வேறு. ஹைட்ரோ கார்ப்பன் இரு திட்டங்களுக்கு மட்டும்தான் தமிழ்நாட்டில்  மத்திய அரசு அனுமதி கொடுத்தது. அதாவது, 2011ஆம் ஆண்டு கிரேட் ஈஸ்ட் கார்ப்பரேசன் என்ற நிறுவனம் 4 வருடம் ஆய்வு செய்ய மட்டுமே இந்த அனுமதி கொடுக்கப்பட்டது. அதற்கு மக்களிடம் எதிர்ப்பு வந்ததால் அந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல இனி தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்காது. மத்திய அரசு அனுமதித்தாலும் மாநில அரசின் கருத்தை கேட்க வேண்டும் என்றும் உத்தரவு போடப்பட்டது. 

அதற்கு பிறகு, 2016 ஆம் ஆண்டில் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆய்வுக்காக அனுமதித்தது. ஆனால், இன்றுவரைக்கும் மாநில அரசு எவ்வித உத்தரவையும் அனுமதியும் கொடுக்கவில்லை. 1958ஆம் ஆண்டின் மத்திய சட்டப்படி எந்த ஒரு மாநிலத்திலும் கடற்கரையில் ஆய்வு செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால், நிலப் பகுதியில் ஆய்வு செய்ய வேண்டும் என்றால் மாநில அரசின் அனுமதியை கண்டிப்பாக பெற்றே தீரவேண்டும் என்றும் மத்திய சட்டமே தெளிவாக சொல்லியிருக்கிறது. தற்போது வேதாந்தா உள்ளிட்ட சில நிறுவனங்களுக்கு 6 அனுமதி கொடுத்தாலும் மாநில அரசு இன்னமும் அனுமதிக்கவில்லை. அதைமீறி மத்திய அரசு எதையும் செய்ய முடியாது. இதை முதலமைச்சருக்கு மத்திய அமைச்சர் தற்போது எழுதியிருக்கும் கடிதத்திலும் குறிப்பிட்டிருப்பது நமக்கு சாதகமாகும்.

எனவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் சட்டம் என்பது முதல்படிதான், இதில் சாதகமும் உள்ளது. சில பாதகமும் இருக்கிறது. முதலில் சட்டம் கொண்டுவருவோம். பிறகு, தேவையானதை சேர்க்கலாம். தேவையற்றதை நீக்கலாம். இந்த அதிகாரம் இந்த சட்டத்திற்கு உள்ளது. எனவே, எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம் என்றார்.

;