tamilnadu

img

நீட் தேர்வினை நிரந்தரமாக ரத்து செய்ய சட்டமன்ற தொடரில் சிறப்பு சட்டம் இயற்றுக...

சென்னை:
நீட் தேர்வினால் உயிரிழந்த  அனைத்து மாணவர்களின் குடும்பத்திற்கும் தமிழக அரசு நிவாரணமாக 50 லட்சம் ரூபாயும் அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் திங்களன்று (செப்14)சென்னை அண்ணாசாலையில் சட்டமன்றம் நோக்கி முற்றுகை போராட்டம் செய்து கைதாகினர்.  

இந்த போராட்டத்திற்கு மாணவர்சங்க மாநிலத் தலைவர் ஏ. டி கண்ணன்  தலைமை தாங்கினார். போராட்டத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய  மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன்,  நீட் தேர்வை  ரத்து செய்வதற்கு  தற்போது நடந்துகொண்டிருக்கும் சட்டமன்ற  கூட்டத்தொடரிலேயே சட்டம் இயற்ற வேண்டும், மத்திய பாஜக அரசு,  மாநில  அரசின் உரிமையை பறிக்கும் விதமாகவும் இந்திய  அரசியல் சட்டத்திற்கு எதிராகவும்  தேசிய  கல்விக்கொள்கை யும் , நீட்தேர்வையும் கொண்டு வந்துள்ளது.  நீட் தேர்வு பயிற்சி மையங்கள்  இந்த காலகட்டத்தில் கோடிக்கணக்கில்  கட்டணம் என்ற பெயரால் கொள்ளையடித்து வருகிறது. இதற்கு மாநில அதிமுக அரசும் துணைபோகிறது. மாணவர்களின் தற்கொலைக்கு எடப்பாடி அரசும் காரணமாக உள்ளதை மாணவர் சங்கம் கண்டிக்கிறது.  மத்திய பாஜக நீட் தேர்வு முறையை உடனே ரத்து செய்யவேண்டும் இல்லையேல் போராட்டம் தொடரும் என்றார். 

 மாநிலத் துணைச் செயலாளர் ஆறு பிரகாஷ், வடசென்னை மாவட்டத்தலைவர் ஆர்.ஜே.ராஜேந்திர பிரசாத், மாவட்டச்செயலாளர் இசக்கி,  மத்திய சென்னை மாவட்டத்தலைவர் மிருதுளா, செயலாளர் விக்னேஷ், காஞ்சிபுரம் மாவட்டச்செயலாளர் தமிழ்பாரதி, திருவள்ளூர் மாவட்டத்துணைத்தலைவர் செல்வம், ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று கைதாகினர்.அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கோட்டை நோக்கி முற்றுகை செய்ய முற்பட்ட மாணவர்கள் அனைவரும் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டனர். காவல்துறையின் முரட்டுத்தனமான நடவடிக்கையால் வீ.மாரியப்பன் , விக்னேஷ் ஆகியோர்க்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டது.