ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களை அடக்கக் கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் இன்னும் தேவையா என அரசியல் சாசன பிரிவு 124 ஏ வை ரத்து செய்யக் கோரும் வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஓய்வு பற்ற மேஜர் எஸ்.ஜி. ஓம்பட்கேர் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்ய வழிவகுக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124ஏ ரத்து செய்யக்கோரி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களை அடக்கக் கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் இன்னும் தேவையா என்று கேள்வி எழுப்பினர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டத்தைக் கடைப்பிடிப்பது ஏன். விசாரணை அமைப்புகளால் தேசத் துரோக சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது வேதனை அளிக்கிறது எனத் தெரிவித்தனர்.
மேலும், இந்த சட்டம் ஒன்றிய அரசுக்குக் குரல்களை எழுப்பும் எதிர்க்கட்சிகள் மீதும் அப்பாவி மக்கள் மீதும் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காவல்துறை அதிகாரிகள் பொறுப்பேற்பதில்லை. தேசத்துரோக வழக்கில் தண்டனை பெறுபவர்களைப் பார்த்தால் அதன் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவிடுகிறோம் என்று தெரிவித்தனர்.