tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

 நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு  அரிசி  பிரித்து அனுப்பி வைப்பு

வேலூர், செப்.12- குடும்பஅட்டைதாரர்களுக்கு விநியோகிக்கும் வகையில் தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கு ரேசன் அரிசி பிரித்து அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் 2,500 டன் ரேசன் அரிசி திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வியாழனன்று  காலை காட்பாடிக்கு ரயிலில் வந்தடைந்தது. இங்கிருந்து லாரிகள் மூலம் வேலூர் மாவட்டத்திற்கு 1,250 டன்னும், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 1250 டன்னும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அங்கிருந்து லாரிகள் மூலம் தாலுகா வாரியாக உள்ள ரேசன் கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்படுகிறது. தொடர்ந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 3 ஆயிரம் மாணவர்களுக்கு  திறன் மேம்பாட்டு பயிற்சி

சென்னை,செப்.12 கர்னாடக டிஜிட்டல் எகானமி மிஷன் உடன் சோனா வள்ளியப்பா குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.  இந்த ஒப்பந்தப்படி மங்களூர் பகுதியில் உள்ள 500 முதல் 1000 மாணவர்களுக்கு தொழில் அடிப்படையிலான பயிற்சி வழங்கப்படும் தொழில் ரீதியாக உலக அளவில் மாணவர்களை மேம்படுத்தும் இந்த ஒப்பந்தம் உதவும்.  உலகளாவிய மற்றும் டிஜிட்டல் தொழில்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை சோனா வள்ளியப்பா குழுமம் தயார் படுத்த உள்ளது. இந்த பயிற்சியானது பிடாடி யில் உள்ள சோனா மேம்பட்ட கற்றல் மற்றும் தொழில்முனை வோர் மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. வரும் 2026-27-ல் முதல் மாணவர் சேர்க்கை  துவங்க உள்ள நிலையில் பெங்களூர் மற்றும் பெலகாவி, மங்களூரு, ஹுப்ளி, சிவமொக்கா மற்றும் தார்வாட் போன்ற பகுதிகளில் உள்ள 500 முதல் 1000 மாணவர்களுக்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் என்று சோனா குழும துணைத் தலைவர் தியாகு வள்ளியப்பா கூறினார்.

கோயம்பேட்டில் கடத்தப்பட்ட  பேருந்து நெல்லூரில் பிடிபட்டது

சென்னை, செப். 12– சென்னை கோயம்பேடு பணிமனையில் கடத்தப்பட்ட அரசுப் பேருந்து, ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கண்டு பிடிக்கப்பட்டது. சென்னை கோயம்பேட்டில் இருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் போக்குவரத்து கழகத்தின் குளிர்சாதனப் பேருந்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திருப்பதிக்கு செல்ல தயாராக இருந்த அரசுப் பேருந்தை மர்ம நபர் கடத்திச் சென்றதாக கோயம்பேடு காவல் நிலையத்தில் பணிமனை மேலாளர் புகார் அளித்தார். இந்த புகாரைத் தொடர்ந்து போலீசார், ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே பேருந்தை கண்டுபிடித்தனர். இதையடுத்து பேருந்தை கடத்திச் சென்ற காது கேளாத, வாய் பேச முடியாத ஒடிசாவைச் சேர்ந்த ஞானசேகர் சாகு (வயது 24) என்ற இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.