tamilnadu

img

கருணை அடிப்படையில் வேலை வழங்க ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை:
கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த, கடலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், கண்டிப்பாக டிசம்பருக்குள் பணி வழங்க வேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது.கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கே.ரவி. இவரது தந்தை, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில், கிராம உதவியாளராக பணியாற்றினார். பணியில் இருக்கும் போது, 2003 மே மாதம் மரணமடைந்தார். கருணை அடிப்படையில் வேலை கேட்டு, திட்டக்குடி தாலுகா அலுவலகத்தை, ரவி அணுகினார். அப்போது, புதிதாக பணி நியமனங்களுக்கு, அரசு தடை விதித்திருந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு பின், விண்ணப்பத்தை சமர்பித்ததாகவும், மூன்று மாத அவகாசத்துக்குள் விண்ணப்பம் வழங்காததாலும், கருணை மனு கோரிக்கையை நிராகரிப்பதாக, கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், ரவி மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:மனுதாரரின் தந்தை, 2003 மே மாதம் இறந்தார். மகனுக்கு கருணை வேலை கோரி, 2005 ஏப்ரலில், தாயார் விண்ணப்பித்துள்ளார். கருணை வேலைக்கு, திட்டக்குடி தாசில்தாரும் பரிந்துரைத் துள்ளார். 2001 முதல், 2005 வரை, பணி நியமனங்களுக்கு தடை இருந்தது உண்மை தான். 2006 பிப்ரவரியில், தடை நீக்கப்பட்டது.கருணை வேலை கேட்டு விண்ணப்பிக்க, மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி, 2007 மார்ச்சில், அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே, மனுதாரர் தரப்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டு விட்டது. புதிய நியமனங்களுக்கு தான் அரசு தடை விதித்திருந்தது. கருணை வேலை கோரும் விண்ணப்பங்களை பெறுவதற்கு, எந்த தடையும் விதிக்கப்படவில்லை. எனவே, கடலூர் ஆட்சியர் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.வரும் டிசம்பருக்குள், மனுதாரருக்கு வேலை வழங்க, ஆட்சியருக்கு உத்தரவிடப்படுகிறது.அதற்குள் வேலை வழங்கவில்லை என்றால், 2021 ஜன., 1ஆம் தேதி, மனுதாரர் பணியில் இருப்பதாக கருதப்படுவார். அவருக்கான சம்பளத் தொகையை, மாவட்ட ஆட்சியரிடம்  இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம்.கடந்த, 2011 அக்டோபரில், இரண்டாவது முறையாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், அன்று முதல் பணியில் சேர்ந்ததாக கருதப்படுவார். பென்ஷன், பணிக்கொடை பெற, இந்த நாட்கள் கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

;