tamilnadu

img

விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்குக... முதல்வருக்கு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள்....

சென்னை:
விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலப்பொதுச்செயலாளர் பெ.சண்முகம் முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு வருமாறு:

தமிழ்நாட்டில் ஆழ்குழாய் மற்றும் கிணற்றுப் பாசனம் அதிகரித்து சுமார் 22 லட்சம் மின் இணைப்புகள் விவசாயத்திற்கு வழங்கப்பட்டுள்ளதை தாங்கள் அறிவீர்கள். இப்பொழுது மாநிலம் முழுவதும் விவசாயப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக உழவடை மற்றும் நடவுப் பணிகள் நடைபெறுகிறது. இந்த நிலையில், 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கினால்தான் விவசாயப் பணிகள் தொய்வின்றி நடைபெறும். வேளாண் உற்பத்தியை அதிகரித்திட இயலும். இப்போது வழங்கப்படும் மும்முனை மின்சாரம் எப்போது வரும்; பிறகு எப்போதும் நிறுத்தப்படும் என்பது தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையிலும் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் 24 மணி நேரமும் தடையின்றி வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தது விவசாயிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்த வாக்குறுதி ஆகும்.

எனவே, தாங்கள் இப்பிரச்சனையில் உரிய கவனம் செலுத்தி விவசாயத்திற்கு 24 மணிநேரமும் தடையின்றி மும்முனை மின்சாரம் கிடைத்திட தக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில்  கேட்டுக் கொள்கிறோம்.மேலும், விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்கக் கோரி விண்ணப்பித்து பல லட்சம் விவசாயிகள் பத்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக் கிறார்கள். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இலவச மின் இணைப்பு என்பதே வழங்காமல் காலங்கடத்தி விட்டார்கள். தங்களது ஆட்சிக்காலத்தில் வரிசை அடிப்படையில விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு வழங்கிட முன்வர வேண்டும் என்பதும், குறிப்பிட்ட கால வரையறைக்குள் விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் மின் இணைப்பு கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மனுவின் நகல் மின்துறை அமைச்சரு க்கும் அனுப்பப்பட்டுள்ளது. 

;