tamilnadu

img

பொது விநியோகம், அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னுரிமை தருக!

சென்னை:
மருத்துவ நெருக்கடியும் பொருளாதார நெருக்கடியும் தீவிரமடைந்துள்ள இக்காலக் கட்டத்தில் தமிழக அரசு நிதி மேலாண்மையை வழக்கம்போல செய்யாமல் அதில் பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என  தமிழக அரசுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசனை கூறியுள்ளது. 

கொரோனா தொற்று ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கங்கள் குறித்து ஆய்வு  செய்யவும் அதனை எதிர்கொள்ள மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும் தமிழக அரசு அமைத்துள்ளரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சி.ரங்க ராஜன் தலைமையிலான குழுவிற்கு மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி விரிவான ஆலோசனைகளை அளித்துள்ளது. 

அதில் பொதுவிநியோக முறை மற்றும் நிதிமேலாண்மை குறித்து கூறியுள்ள அம்சங்கள் வருமாறு:

நெருக்கடியான இக்காலகட்டத்தில் நிதி மேலாண்மையை வழக்கமாக செய்வதுபோல்  செய்ய முடியாது. பொருத்தமான முறையில் மாற்றம் தேவைப்படுகிறது. கோவிட் 19 சம்பந்தப்பட்ட சிகிச்சை மற்றும் மருத்துவ பணிகள், பொருளாதார பாதிப்பை ஈடுகட்ட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், வேலைவாய்ப்புகள், நிவாரணம், பொது விநியோக முறை,  கல்வி, சுகாதாரம் போன்றவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதே முன்னுரிமையாக இருக்க வேண்டும். நெடுஞ்சாலைத்துறையில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பணிகளுக்கு டெண்டர் விடுவது உள்ளிட்ட இதரநடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். இதர வகை செலவினங்களையும் கட்டுக்குள் வைக்க வேண்டும்.

பொது விநியோக முறை
கோவிட் 19 நோய்த் தொற்று மற்றும் திட்ட மிடப்படாத பொது முடக்கத்தால் மக்கள் வேலையும், வருமானமும் இழந்து தவிக்கும் சூழலில் வருமான வரிக்கு உட்படாத பகுதியினருக்கு, குடும்பம் ஒன்றுக்கு மாதம் ரூ. 7500/- ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து வழங்கிட வேண்டும். அதேபோல ஜூலைமாதம் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை தாரர்களுக்கு (NPHH) அதிகபட்சம் 20 கிலோ அரிசி தான் வழங்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளதை மாற்றி, ஏற்கனவே, தமிழகத்தில் ஏப்ரல், மே, ஜூன் மாதம் வழங்கியதுபோல்  குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப, நபர் ஒருவருக்கு ஐந்து கிலோ அரிசி தொடர்ந்து வழங்க வேண்டும். அதே போல், மத்திய அரசு அறிவித்துள்ள நபர் ஒன்றுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு போன்றவற்றோடு இதர அத்தியாவசியப் பொருட்களையும் விலையில்லாமல் 2020 டிசம்பர்  மாதம் வரை வழங்க வேண்டும்.

விலைவாசியை கட்டுக்குள் வைத்திடுக!
கொரோனா தொற்று நெருக்கடிகளை பயன்படுத்தி பெரும் லாபம் பெறுவதற்காக வேண்டுமென்றே விலைகளை உயர்த்துகிற போக்குகளை தடுத்து நிறுத்த வேண்டும். பொருட்களை பதுக்குவது, செயற்கை பற்றாக்குறையை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையான சமயங்களில் மலிவு விலையில் காய்கறிகள் மளிகை பொருட்களை விற்பனை செய்ய அரசு முன்வர வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு, வேளாண் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய விதத்தில்  இக்காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று அவசர சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்.

உலக மார்க்கெட்டில் கச்சா எண்ணெய்க்கு ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் பயன்களை இந்தியநாட்டு மக்கள் பெற முடியாமல் மத்திய, மாநில அரசுகள் வரிகள் போட்டு, விலை உயர்வை அமலாக்கி வருகின்றன. எனவே, வரிகளை குறைத்து பெட்ரோல் - டீசல் விலைகளை குறைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;