சென்னை,ஜூன் 14- தொடரும் காவல்நிலைய மரணச் சம்பவங்களில் கொலை வழக்கு பதிவு செய்து, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் ஜூன் 14, 15 ஆகிய தேதிகளில் சென்னையில் நடை பெற்று வருகிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் தலைமையேற்றுள்ளார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பி.சம்பத், பெ.சண்முகம் உள்ளிட்டு மாநில செயற் குழு உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் முதள் நாளான ஜூன் 14 அன்று கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சென்னை கொடுங்கையூரில் விசாரணைக் கைதியின் மரணமும், நாகை மாவட்டத்தில் சிறைக் கைதி யின் மரணமும் அதிர்ச்சி தரும் செய்தி களாக வந்துள்ளன. இதோடு சேர்த்து, கடந்த ஓராண்டில் 8 மரணங்கள் நடந்திருக் கும் நிலையில், இப்பிரச்சனையில் தீவிர மான நடவடிக்கை தேவை என்று சிபிஎம் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. சென்னை, கொடுங்கையூர் காவல் நிலையத்தில், கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அப்பு (எ) ராஜசேகர் நீதிமன்றத்தில் ஒப்படை க்கப்படவில்லை. விசாரணையின் பேரால் காவல் நிலையத்தில் வதைக்கப்பட்டு, 12 ஆம் தேதியன்று மரணமடைந்தார். திட்டச்சேரியை அடுத்துள்ள பனங் காட்டூரில் வசித்து வந்த சிவ சுப்பிரமணியன், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கைது செய்யப் பட்டு, சிறைச் சாலையில் வதைக்கப் பட்டுள்ளார்.
3 நாட்களுக்கு பின் திடீரென உயிரிழந்ததாக உறவினர் களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு நிகழ்வுகளோடு சேர்த்து, கடந்த ஓராண்டில் மட்டும் 8 காவல் நிலைய, சிறைச்சாலை மர ணங்கள் நடந்திருப்பதாக சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. மேலே குறிப்பிட்ட கொடுங்கையூர் மரணச் சம்ப வத்தில் தொடர்புடைய காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி விசாரணைக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மாஜிஸ்ட்ரேட் விசார ணை நடந்திருக்கிறது. முழுமையான உடற்கூராய்விற்கு உத்தரவிடுவதுடன், கொலை வழக்கு பதிய வேண்டும். சிறைக் கைதி சிவசுப்பிரமணியன் மரணம் தொடர்பாக நாகை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சன்மிஹா விசார ணை நடத்தியுள்ளார். இந்த வழக்கி லும் உயர்மட்ட விசாரணைக்கு உத்தர விட்டு, குற்றம் இழைத்தவர்கள் கடுமை யாக தண்டிக்கப்பட வேண்டும். மேற் குறிப்பிட்ட இரு குடும்பங்களுக்கும் தலா ரூ. 25 லட்சம் இழப்பீடாக வழங்கிட வேண்டும். முதலமைச்சர் மற்றும் காவல் துறை டிஜிபி பலமுறை வலியுறுத்திய பிறகும், காவல் நிலைய வன்முறை கள் தொடர்வது மிகுந்த வேதனை யளிக்கிறது. காவல் நிலையத்தில், விசாரணை நடைமுறைகளை முறைப்படுத்த உயர் அதிகாரிகள் நேரடியாக பொறுப் பேற்க வேண்டும். மனித உரிமையை பாதிக்காத நடைமுறைகள் குறித்த பயிற்சியை அனைத்து காவலர்களு க்கும் வழங்கிட வேண்டும். சிறைச் சாலை நடைமுறைகளை ஆய்வு செய்து மாற்றியமைக்க வேண்டும். மேலும், குற்றம் இழைக்கும் காவ லர்களுக்கு கடுமையான தண்டனையை விரைவாக வழங்குவதுடன், காவல் நிலையத்திலோ, சிறைச்சாலையிலோ இனியும் இதுபோன்ற மரணங்கள் நடக்காமல் தடுக்கும் விதத்தில் அர சின் நடவடிக்கைகள் அமையவேண்டும்.
சாதி மறுப்பு திருமண தம்பதியர் படுகொலைக்கு கண்டனம்
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் தலித் சமூகத்தைச் சேர்ந்த சரண்யா, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வந்தவாசி பகுதி யைச் சேர்ந்த மோகன் ஆகியோரின் காதல் திருமணம் ஒரு வாரத்துக்கு முன்பு தான் நடந்தது. ஜூன் 13 அன்று சரண்யா வின் சகோதரனும், அவர் மைத்து னனும் புது மண தம்பதியரை நயமாக பேசி வீட்டுக்கு வரவழைத்து கொடூர மாக இருவரையும் படுகொலை செய்துள்ள்ளனர். இக்கோர படுகொலை யை சிபிஎம் மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த படுகொலையில் கூட்டுச் சதிக்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இப்படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் காவல்துறை கைது செய்து உரிய முறையில் வழக்கு நடத்திட வேண்டும். மோகனின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவித்து அரசு பரப்புரை செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.