tamilnadu

img

சமூகத்திலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள இயலாத மக்களிடம் காவல்துறையினர் அதிகாரத்தைக் காட்டக் கூடாது - மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்

சாமானிய மக்களிடம் காவல்துறையினர் தனது அதிகாரத்தைக் காட்டக்கூடாது, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமெனத் தமிழ்நாடு காவல்துறைக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகாரில், தன்னுடைய மகன் பல்லாவரத்தில் வாடகை வீடு எடுத்து தங்கி படித்து வந்த நிலையில், மாடியிலிருந்து கீழே விழுந்ததால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த தன்னை காவல்துறை அழைத்ததாகவும், குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு துன்புறுத்தியதாகவும் தனலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னை மூன்று வெவ்வேறு தங்கும் விடுதிகளில் வைத்து காவல்துறையினர் மிரட்டியதோடு ஆபாசமான வார்த்தைகளைக் கூறி மன உளைச்சலை ஏற்படுத்தியதாக பழவந்தாங்கல் காவல்நிலையத்தின் அப்போதைய பெண் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது புகார் அளித்திருந்தார். 

இதனை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், இந்த வழக்கில் மனித உரிமை மீறல் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி பாதிக்கப்பட்ட தனலட்சுமிக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயை 8 வாரக் காலத்திற்குள் இழப்பீடாக வழங்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இந்த தொகையை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றிய முந்தைய ஆய்வாளர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட காவலர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், சமூகத்திலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள இயலாத மக்களிடம் காவல்துறையினர் அதிகாரத்தைக் காட்டக் கூடாது எனவும், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் கண்ணியமாக நடத்த வேண்டுமெனவும், அவர்கள் குற்றவாளிகளாக ஆகாத வகையில் காவல்துறையினரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

;