மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
புதுச்சேரி, ஆக. 29- கடலூரை சேர்ந்த ஒருவர் தலையில் காயமடைந்து ஜிப்மரில் மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தாலுகா, வடகுத்து கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (58). கடந்த ஆகஸ்ட் 20 அன்று தலையில் பலத்த காயம் அடைந்தார். இவருக்கு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உறுப்புகள் வேறு நபர்களுக்கு தானமாக தரப்பட்டுள்ளது. உன்னத முடிவு இதுபற்றி ஜிப்மர் சார்பில் கூறியிருப்பதாவது: “மனிதாபிமானத்தின் ஒரு குறிப்பிடத்தக்க செயலாக, ரமேஷ் குடும்பத்தினர் தானாக முன்வந்து உறுப்பு தானத்திற்கு சம்மதித்தனர். கடந்த 27 அன்று அவரது இரு சிறுநீரகங்கள், கல்லீரல், இரண்டு கருவிழிகள் தானமாக பெறப்பட்டது. இரண்டு சிறுநீரகங்களும், கருவிழிகளும் ஜிப்மரில் உரிய நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் வேறு நபருக்கு பொருத்தப்பட்டது. இது பல நோயாளிகளுக்கு புதிய வாழ்க்கையையும் பார்வையையும் அளித்தது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.