tamilnadu

img

திமுக தலைவர் மகள் இல்லத்தில் சோதனை.... ஆத்திரத்தின் உச்சத்தில் பாஜக அரசு....

சென்னை:
தமிழக மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த பிரச்சாரம் ஞாயிறன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் தலைவர்கள்இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

மறுபுறத்தில், தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டுவருகிறார்கள். தேர்தல் ஆணையத்துடன் வருமான வரித்துறையும் வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனை களைத் கண்காணித்து வருகிறது. இதுவரைக்கும் வெளிவந்த அனைத்து தேர்தல் கணிப்புகளும் மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி அமோகமாக வெற்றிபெறும். திமுக தலைவர்தான் அடுத்த முதலமைச்சர் என்றும் அறிவித்து வருகிறது. மேலும், களநிலவரமும் நாளுக்கு நாள் ஆளும் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் எதிராக மாறிவருகிறது.  இதனால், ஆத்திரமடைந்திருக்கும் மத்திய பாஜக அரசு அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளை தனது கைக்குள் வைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களை அச்சுறுத்தும் வேலையை செய்து வருகிறது. கடந்த வாரம் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளருமான எ.வ.வேலுக்கு சொந்தமான கல்விநிறுவனங்கள், அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அந்த சமயம்,திமுக தலைவர் அந்த தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை-மருமகன் சபரீசன் வீட்டில் வெள்ளியன்று (ஏப்.2) காலை 7 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 30 பேர் துணை ராணுவப்படையின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.இதேபோல், அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மோகன் எம்.எல்.ஏ.வின் மகனும் திமுக ஐடி பிரிவு துணைத் தலைவருமான கார்த்திக் மோகன் மற்றும் ஜி.ஸ்கொயர் பாலா உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் ஐ பேக் நிறுவனம் 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனுக்கு கார்த்திக் மோகன், ஜி.ஸ்கொயர் பாலா ஆகியோர் நெருங்கிய நண்பர்களாவர்.

இந்த சோதனை நடந்த போது திமுக தலைவர் சென்னையில் இல்லை. தேர்தல் பரப்புரைக்காக அதிகாலையே அரியலூருக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.அண்ணா நகரில் எம்எல்ஏ மோகனின் இல்லம் முன்பு திரண்ட திமுக தொண்டர்கள் வருமான வரித்துறை அதிகாரிகளை கண்டித்தும் பாஜக-அதிமுக அரசுகளை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பினர். 

செந்தில் பாலாஜி எம்எல்ஏ
சென்னை மட்டுமின்றி கரூர் மாவட்டம் ராமேஷ்வரப்பட்டியில் உள்ள கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ வீட்டிலும் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதிமுகவிலிருந்த விலகிய செந்தில் பாலாஜி 2018 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. மொத்தமாக தமிழ்நாட்டில் 15-க்கும்மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறை அலுவலர்கள் இந்த சோதனையை நடத்தியுள்ளனர். 

;