tamilnadu

சென்னை மற்றும் ஆலந்தூர் முக்கிய செய்திகள்

காவலரை தாக்கிய 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது

சென்னை, ஜூன் 23- சென்னை பாண்டி பஜார் காவல் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருபவர் கார்த்திகேயன். இவர் கடந்த 13 ஆம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார். வள்ளுவர்கோட்டம் பாலம் அருகே காரில் வந்த 4 வாலிபர்கள் அங்கு நின்ற திருநங்கைகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனை கவனித்த காவலர் கார்த்திகேயன் 4 வாலிபர்களையும் அங்கிருந்து புறப்படுமாறு கூறினார். இதில் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும்  கார்த்திகேயனை சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த கார்த்திகேயனுக்கு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  இந்நிலையில் காவலரை வாலிபர்கள் தாக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் 4 பேரையும்  தேடினர். பிறகு ஏழுகிணறு பகுதியை சேர்ந்த சுலைமான், ரிஸ்வான், ராயபுரத்தை சேர்ந்த முகமது அக்பர், முகமது நவூஷத் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கைதான 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல்துறை ஆய்வாளர் ஏ.கே.விஸ்வ நாதன் உத்தரவிட்டார். இதையடுத்து சுலைமான் உள்பட 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

சென்னை விமான நிலையத்தில்

ரூ. 21 லட்சம் தங்கம் கடத்தல்

ஆலந்தூர், ஜூன் 23-  குவைத்தில் இருந்து சென்னைக்கு ஞாயிறன்று (ஜூன்) அதிகாலை 1 மணிக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்களின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அவர்கள் 2 பேரும் உள்ளாடைக்குள் மறைத்து வைத்து தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது தெரிந்தது. மொத்தம் 593 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 21 லட்சம் ஆகும். தங்கக் கட்டிகள் யாருக்கு கடத்தப்பட்டது? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்பது குறித்து பிடிபட்ட 2 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வரு கிறது.

 

;