மகாவீர் தினம்: அக்.21 இறைச்சிக் கூடங்கள் மூடல்
சென்னை, அக்.18- மகாவீர் நிர்வாண தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் வருகின்ற செவ்வாயன்று (அக்.21) அரசு உத்தரவின்படி மூடப்படுவதாக பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் (கால்நடை மருத்துவப் பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்கள் மூடப்படும். மேலும், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும். இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.
இயர்போன் பயன்பாடு காதுகளுக்கு ஆபத்து மருத்துவர்கள் எச்சரிக்கை
சென்னை, அக்.18- பேருந்து, ரயில் பொது இடங்கள் எங்கும் மக்கள் இயர்போனுடன் காணப்படுகின்றனர். ஹெட்செட்களை மணிக்கணக்கில், நாள், மாத, ஆண்டு கணக்கில் பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேம் வாகனங்களில் செல்லும்போது இயர்போன் பயன்படுத்துவதால் கவன சிதறல் ஏற்பட்டு ஆபத்து நேரிடலாம். காது பகுதி மிகவும் உணர்வுமிக்க பகுதி என்பதால், வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் ஒலி மாசு நிச்சயம் செவித்திறனை கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தீபாவளியன்று ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கம்
சென்னை, அக்.18- தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை யொட்டி சென்னை கடற்கரை - செங்கல்பட்டு, சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூர்பேட்டை, வேளச்சேரி உள்ளிட்ட அனைத்து மின்சார ரயில் வழித்தடங்களிலும் ஞாயிறு கால அட்டவணைப்படி ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வழக்கமாக 550 ரயில்கள் இயங்கும் நிலையில், பண்டிகை நாட்களில் 40 சதவீத ரயில்கள் குறைவாக இயக்கப்படும். ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒரு ஷிப்ட் மட்டும் செயல்படும்.
பேருந்து மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை 24ம் தேதி வரை நீட்டிப்பு
சென்னை, அக்.18- சென்னையில் அக்டோபர் 16முதல் நவம்பர் 15 வரையிலான விருப்பம்போல் பயணம் செய்யும் அட்டைகளுக்கான விற்பனை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார். அக்டோபர் 17முதல் 22 வரை சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு, பயண அட்டைகள் விற்பனை 23 மற்றும் 24 ஆகிய இரண்டு நாட்கள் நீட்டிப்பு செய்யப்படும். ரூ.1,000, ரூ.2,000 மதிப்பிலான பயண அட்டை, மாதாந்திர சலுகை பயண அட்டை, 50 சதவீத மாணவர் சலுகை பயண அட்டை ஆகியவை அனைத்து மாநகர் போக்குவரத்து கழக மாதாந்திர பயணச்சீட்டு விற்பனை மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
குடிபோதையில் பேருந்து நிலையத்தில் அராஜகம்: வாலிபர் கைது
வேலூர், அக்.18- வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வியாழனன்று இரவு 11 மணியளவில் குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் பயணிகளை ஆபாசமாக பேசியும் அச்சுறுத்தியும் கலாட்டாவில் ஈடுபட்டு சில பயணிகளை தாக்கினார். பயணிகள் தகவலின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் அவுட்போஸ்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போதும் அடங்காத வாலிபர் போலீசாரையும் ஆபாசமாக பேசி தாக்க முயன்றதுடன், போலீஸ் அவுட்போஸ்ட்டையும் அருகில் இருந்த கடைகளையும் அடித்து நொறுக்கி, தின்பண்டங்கள் வைக்கப்பட்டிருந்த பாட்டில்களை எடுத்து வீசி ரகளை செய்ததால் போலீசார் அவரை கைது செய்தனர்.
குற்ற வழக்குகளில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
மதுராந்தகம், அக்.18- மதுராந்தகம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சிவா(எ) சிவநேசன்(22), பாரூக்(26), மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்(22), மேல வலம் பேட்டை பகுதியைச் சேர்ந்த சேது(எ) சேது ராமன்(27) ஆகிய 4 பேர் மீதும் படாளம், மதுராந்தகம் காவல் நிலை யங்களில் கஞ்சா விற்பனை, பணம் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அதிகாரி சாய் பிரனீத், ஆட்சியர் சினேகா விற்கு பரிந்துரைத்தார். அதன்பேரில்ஆட்சியர் உத்தரவிட்டு, போலீசார் நால்வரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளுக்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
செங்கல்பட்டு, அக்.18- செங்கல்பட்டு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பான பேரிடர் மேலாண்மை பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை மற்றும் புயலினால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த புகார்களை பெற்று உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசர கால கட்டுப்பாட்டு அறை இயங்கி வருகிறது என மாவட்ட ஆட்சியர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.பொது மக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 044- 27427412, 044-27427414, கைபேசி/வாட்ஸ்அப் எண் 9444 272345 மூலம் புகார்களை தெரிவிக்கலாம். வாட்ஸ்அப் எண்ணில் வெள்ள அபாயங்கள், சேதங்கள் குறித்த புகைப்படங்களையும் அனுப்பலாம். மழை, புயல் காலங்களில் ஆறு, ஏரி, குளங்கள் போன்ற ஆழமான நீர் நிலைகளில் செல்லாமலும், மின்கம்பங்களில் கால்நடை களை கட்டி வைக்காமலும் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.'
அரசு உதவி பெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகமாக மாற்ற எதிர்ப்பு
சென்னை, அக்.18- அரசு உதவி பெறும் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு எதிராக தமிழ்நாடுமாநில பொதுப் பள்ளிக்கான மேடை எதிர்ப்பு தெரி வித்துள்ளது. அதன், பொதுச்செயலாளர் பி.பி. பிரின்ஸ் கஜேந்திர பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் கல்லூரி ஒழுங்கு முறை சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அவசரப்படக் கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாறினால் கல்விக் கட்டணம் பன்மடங்கு அதிகரித்து, குறைந்த வருமானம் உள்ள மாணவர்கள் உயர்கல்வியில் இருந்து விலக்கப்படுவார்கள். தற்காலிக நியமனம் பெற்ற ஆசிரியர்களின் சராசரி மாத வருமானம் ரூ.15ஆயிரம் மட்டுமே என்பதால் அவர்களின் பிள்ளைகள் எப்படி படிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. தமிழ்நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அரசுக் கல்லூரிகள் உள்ள நிலையில், இந்த மாற்றம் தேசிய கல்விக்கொள்கை 2020-ன் தனியார்மய நோக்கத்தை நிறைவேற்றும். கல்வி மற்றும் கல்வி சாரா பணியாளர்களின் சேவை நிபந்தனைகள் பாதிக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் மருத்துவமனை ஊழியர்களுக்கு 19 விழுக்காடு போனஸ்
சென்னை, அக்.18 – எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் நிறு வனத்துடன், எம்ஜிஎம் ஹெல்த்கேர் மலர் ஊழியர்கள் சங்கத்தினர் 2024 -2025 ஆம் ஆண்டுக்கான போனஸ் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், கடந்த ஆண்டைப் போலவே 19 விழுக்காடு வழங்க நிர்வாகம் ஒப்புக்கொண்டது. இதன்படி ரூ.40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை தொழிலாளர்கள் பெறுவார்கள். இந்ததொகை முதல் தவணை அக்.17 அன்றும், இரண்டாவது தவணை டிச.15 தேதிக்குள், மூன்றாவது தவணை ஜன.15 தேதிக்குள் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த பேச்சு வார்த்தையில் சங்கத்தின் கவுரவத் தலைவர் ஆர். ரமேஷ் சுந்தர், கவுரவத் துணைத் தலைவர் ஆர்.கிருஷ்ண மூர்த்தி, பொதுச்செயலாளர் எம். இன்பரசி, தலைவர் ஜெ. இமானுவேல், இணைச் செய லாளர் ஐ. ஆர். ரவி, துணை தலைவர் எஸ். விஜயா, நிர்வாகத்தின் சார்பில் தலைமை செயல் அதிகாரி வேணுகோபால், தலைமை மனிதவள மேம்பாட்டு அதிகாரி பாலாஜி மற்றும் இத்திஸிரி ஆகியோர் பங்கேற்றனர்.
தீபாவளிக்கு திணறும் கிளாம்பாக்கம் பேருந்து முனையம்!
சென்னை, அக்.18- தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த மூன்று நாட்க ளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. கடந்த இரு நாட்களில் மட்டும் 3,59,840 பேர் பயணம் செய்தனர். கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பேருந்துகள் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக புறப்பட்டன. முன்பதிவு செய்த பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் வராததால் குழப்பம் நிலவியது. போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டு, “ஞாயிறன்று 1400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு 2 லட்சத்து 39 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர், கடந்த ஆண்டை விட 70 ஆயிரம் பேர் கூடுதல். செங்கல்பட்டு அருகே பாலாறு மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஏற்பட்டது. நெட்வொர்க் பிரச்சனைக்கு தற்காலிக மற்றும் நிரந்தர நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஆகாய நடைமேடை பணிகள் முடியும்” என்றார்.