tamilnadu

img

மாதவரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இந்தாண்டும் சாதனை

சென்னை, ஏப். 19- தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அளவிற்கு சென்னை பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண் எடுத்து பள்ளிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர். சென்னை மாதவரம் அருகே உள்ள மூலச்சத்திரத்தில் வசித்துவரும் ஏழை ஆட்டோ தொழிலாளி ஏ.கே.அமனுல்லா-காதர்பீவி தம்பதியரின் மகளான அல்பியத்துன் நிஷா 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 561 மதிப்பெண் எடுத்துள்ளார். இந்த மதிப்பெண் எடுப்பதற்கான சூழலை ஏற்படுத்தித்தந்த பள்ளி நிர்வாகத்திற்கும் பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்ட அல்பியத்துன்நிஷா தான் ஐஏஎஸ் அதிகாரியாக வரவேண்டும் என்பது தன் லட்சியம் என்று பெருமையுடன் கூறினார்.சென்னை கொடுங்கையூர் முத் தமிழ்நகரில் வசித்துவரும் கே.ஜாகீர்உசேன்-சபீனா தம்பதியரின் இரண்டாவது மகளான ராஃபியா 576 மதிப்பெண் எடுத்துள்ளார். இவர்கள் இருவரும் தனது வகுப்பாசிரியர் மகேஷ்வரி மற்றும் விஜயா டீச்சரின் அன்பான, தெளிவான போதனை முறையால் மட்டுமே இதை சாதிக்கமுடிந்ததாக கூறினர். மேலும் தலைமை ஆசிரியர் எஸ்.செல்வகுமாரி, உதவி தலைமை ஆசிரியர் குலாம் தஸ்தகீர் ஆகியோரின் சீரிய வழிகாட்டுதலால் எங்கள் பள்ளி மாணவிகள் பெரும்பாலானோர் அதிக மதிப்பெண் எடுத்து தாங்கள் விரும்பிய பாடத்தை தேர்வு செய்யும் நிலைக்கு வந்தது இவர்களால் தான் என்று கூறி நன்றி தெரிவித்துக்கொண்டனர்.


பள்ளியின் தேர்ச்சி விகிதம் அதிகரித்தது குறித்து தலைமை ஆசிரியர் எஸ்.செல்வகுமாரியிடம் கேட்டபோது, “பெரம்பூர் மாதவரம் நெடுஞ் சாலையில் உள்ள எங்கள் பள்ளியில் பயிலும் மாணவிகள் ஏழை குடும் பத்தை சேர்ந்தவர்கள், மொத்தம் 2376 மாணவிகள் இங்கு பயில்கின்றனர். இந்த கல்வியாண்டில் 601 மாணவிகள் 12 ஆம் வகுப்புத்தேர்வு எழுதினர் இது வடசென்னையிலேயே அதிகம். இதில் 563 மாணவிகள் நல்லமதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர். 14 வகையான பாடப்பிரிவுகளில் 3 தொழிற்கல்வி சார்ந்த பிரிவுகளில் பயில்கின்றனர். இம்மாணவிகளின் கல்விக்கனவை நிறைவேற்றுவதைத்தவிர எங்களுக்கு வேறு என்ன வேலை’’ என்றார் .எங்கள் மாணவிகளிடம் பாகுபாடு காட்டுவதில்லை. மதிப்பெண் எடுப்பது குறித்து ஒரு திட்டமிடலுடன் எல்லோருக்கும் ஒரே மாதிரியான போதனை முறையை பின்பற்றுகிறோம். படிப்பும் , ஒழுக்கமும் தான் எங்கள் தாரகமந்திரம். ஆண்டு தோறும் எங்கள் பள்ளி சென்னை மாவட்டத்தில் நல்ல மதிப்பெண் எடுத்துவருகிறது. மாணவர்களை கண்காணிக்கவும் , பயிற்றுவிக்கவும் நல்லாசிரியர்கள் பெற்ற பள்ளியாக இது திகழ்கிறது. மாலைநேரத்தில் கூடுதலாக நேரம் எடுத்து கல்வி போதிக்கப்படுகிறது. மாணவிகள் பயில பசி ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக அரசு சிற்றுண்டி ஏற்பாடு செய்துள்ளது. அதுமட்டுமன்றி நாங்களும் எங்கள் சொந்த ஊதியத்திலிருந்து ஒரு சிறுபகுதியை கொடுத்து இரவுநேரங்களில் சிற்றுண்டி சமைத்து தருகிறோம். இதனால் மாணவர்கள் தொய்வின்றி பயில உதவுகிறது. இது எங்களுக்கு மனநிறைவையும் தருகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.அடுத்த கல்வியாண்டில் எங்கள் மாணவிகள் இன்னும் சாதிப்பார்கள் அதற்கான திட்டமிடலை சக ஆசிரியர்கள் மற்றும் உதவி தலைமை ஆசிரியர் குலாம் உள்ளிட்டோரிடம் பேசிவருகிறோம் என்றார்.


கேரளசமாஜம் பள்ளி

சென்னை பூந்தமல்லி நெடுஞ் சாலையில் உள்ள கேரள வித்யாலயம் மேல்நிலைப்பள்ளியில் மொத்தம் 125 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் விழுக்காடு 95 ஆகும். இதில் 24 பேர் சாதனை படைத்துள்ளனர். 37 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

;