tamilnadu

img

இடதுசாரி மாடல்! - பினராயி விஜயன்,முதலமைச்சர், கேரள அரசு

இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மே 20, 2022 அன்று ஒரு ஆண்டை நிறைவு செய்துள்ளது. வளர்ச்சி, பொது நலன் மற்றும் ஜனநாயகத்திற்கான  இடதுசாரி மாடலுக்கு மக்கள் அளித்த அங்கீகாரமே  கடந்த சட்டமன்றத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணிக்கு கிடைத்த வெற்றி. 2016-21 ஆட்சியில் மேற்கொண்ட கொள்கைகள் மற்றும் திட்டங்களை மேலும் ஆர்வத்துடன் முன்னெடுத்துச் செல்ல தற்போதைய அரசாங்கம்  முயற்சிக்கிறது. கடந்த ஒரு வருடத்தின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் அதன் செயல்திறனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

580 வாக்குறுதிகள் நிறைவேற்றம்

தேர்தலின் போது மக்களுக்கு அளித்த 600 வாக்குறுதிகளில் 580 வாக்குறுதிகளை நிறைவேற்றிய வரலாற்றை படைத்தது முந்தைய இடது ஜனநாயக முன்னணி அரசு. இம்முறை இடது ஜனநாயக முன்னணி தனது தேர்தல் அறிக்கை மூலம் கேரள மக்களுக்கு 900 வாக்குறுதிகளை அளித்துள்ளது. அந்த வாக்குறுதிகளை நூறு சதவீதம் நிறைவேற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இந்த அரசாங்கம் முன்னோக்கிச் செல்கிறது. அதுதொடர்பாக மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த ஜனநாயக நெறிமுறைகளை பின்பற்ற அரசு தயங்குவதில்லை. கடந்த அரசாங்கத்தின் போது இருந்த  தைப் போன்று அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் ஓராண்டு முடிவடைந்த  நிலையில் முன்னேற்ற அறிக்கை (Progress Report) பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. முன்னேற்ற அறிக்கையை தயாரித்து மக்களிடம் சமர்ப்பிப்பதன் மூலம் ஜனநாயகத்தில் மக்களுக்கே இறை யாண்மை என்ற இடதுசாரிகளின் நிலைப்பாட்டை உரத்த குரலில் அரசு அறிவித்து வருகிறது.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் உரிமைகள் மீதான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, மக்கள் விமர்சன ரீதியாக மதிப்பிடும் வகையில், இந்த அறிக்கையை அரசு தயாரித்து வருகிறது. மக்களின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்வது மட்டுமன்றி அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவதும், முன்னேறத் தேவையான விருப்பங்களையும் ஆற்றலையும் அவர்களுக்குள் விதைப்பதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும். நவீன நாடுகளுக்கு நிகரான வாழ்க்கைத் தரத்தையும், வசதிகளையும் மேம்படுத்தி, புதிய கேரளாவை  (நவ கேரளம் ) நனவாக்க வேண்டும் என்ற மாபெரும் இலக்கை அடைய, மக்களின் தீவிரப் பங்களிப்பு அவசியம். அதை உறுதிப்படுத்த ஜனநாயக செயல்முறை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும். அரசாங்கம் தனது நடவடிக்கைகளை மக்களிடம் முன்வைத்து அவர்களின் ஆலோசனைகளையும் விமர்சனங்களையும் ஏற்றுக்கொண்டு அந்த இலக்கை அடைய முயற்சிக்கிறது.

மாநில அரசுகளைக் கட்டிப்போட முயலும் ஒன்றிய அரசு

கூட்டாட்சி அமைப்பிற்குள், மாநில அரசுகளுக்கு பல வரம்புகள் உள்ளன. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு இப்போது அந்த வரம்புகளை அதிகப்படுத்தும் கொள்கைகளை அமல்படுத்த முயற்சிக்கிறது. மாநில அரசின் நிர்வாக அதிகாரங்கள், பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை கட்டிப்போடும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இதனால், வரி வருவாயில் இருந்து வளர்ச்சித் திட்டங்கள் வரை  பெரும்பாலான பகுதிகளில் கேரளா  பல தடைகளைச் சந்தித்து வருகிறது. மறு புறம், எளிய மக்களை அந்நியப் படுத்தும் நவீன தாராளமயக் கொள்கை களின் அழுத்தத்தையும் நாம் எதிர்கொள்கிறோம். சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அனைத்து துறைகளி லும் அரசின் தலையீடு இல்லாமல், தனி யாருக்கு அதிகாரம் மாற்றப்படுவதை பல இடங்களில் நாம் காண்கிறோம். சமூக நலன் என்பது அரசுகளின் நிகழ்ச்சி நிரலில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டு வருகிறது.

அர்ப்பணிப்பு மிக்க அரசாங்கம்

இந்த இரண்டு அழுத்தங்களையும் முறியடித்து, மக்களின் வளர்ச்சி மற்றும் நலனுக்கான மாற்று மாதிரியை உரு வாக்க இந்த அரசு முயற்சிக்கிறது. கடந்த  ஆறு ஆண்டுகளாக, கேரள இடது ஜன நாயக முன்னணி அரசு, இது சாத்தியம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த முடிந்துள்ளது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் பெரும் சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மக்களின் நம்பிக்கையாலும், அவர் களின் தீவிரப் பங்கேற்பாலும், இதுவரை சாத்தியமற்றதாகக் கருதப்பட்ட கெயில் எரிவாயுக் குழாய், எடமன்-கொச்சி மின் திட்டம், தேசிய நெடுஞ்சாலை மேம்பாடு போன்ற பல முக்கியத் திட்டங்களை அரசால் நிறைவேற்ற முடிந்தது. கோவிட் தொற்றின் போது உலகப் புகழ்பெற்ற பாதுகாப்பு மாற்று முன் மாதிரியை (alternative)   எங்களால் எழுப்ப முடிந்தது. சிதைந்து வரும் பொதுக் கல்வி மற்றும் பொது சுகாதார அமைப்புகள் முன்னோடியில்லாத வெற்றியை அடைந்துள்ளன. பொதுத் துறை நிறுவனங்கள் விற்பனையின் போது பொதுத்துறை நிறுவனங்களை மாநில அரசு கையகப்படுத்தி, இந்நிறு வனங்களை கேரள வரலாற்றில்  மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியதற்கு, மக்கள் மீதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு ஒரு சான்றாகும்.

இடது ஜனநாயக முன்னணியைப் பொறுத்தவரை, தேர்தல் காலத்தில்  வாக்காளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கான தந்திரம் அல்ல தேர்தல் அறிக்கை. நாட்டின் முன்னேற்றத்திற்கும் நன்மைக்காகவும்  செயல்படுத்தப்பட வேண்டிய கொள்கை கள் மற்றும் நடவடிக்கைகள் தான் தேர்தல் அறிக்கை.  தேர்தல் அறிக்கை யை  மக்கள்  முன்வைத்து,  இந்த  அரசியலுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே, அவை சமரசம் இன்றி செயல்படுத்தப்படும். மேலும், அந்தக் கொள்கையின் அமலாக்கம் மற்றும் முன்னேற்றம், பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்ற கருத்தை உணர்த்தும் வகையில் துல்லியமாக மக்களுக்கு முன்வைக்கப் படும். அத்துடன் தடைகளையும் நெருக்கடிகளையும் பகிர்ந்துகொண்டு மக்களைத் திரட்டி அவற்றைக் கடக்கவும் செய்வோம்.

விமர்சன ரீதியாக மதிப்பிடுவோம்

தற்போது தேர்தல் அறிக்கையில்  900 வாக்குறுதிகள் உள்ளன. இதில்  765 வாக்குறுதிகள் மீதான நட வடிக்கை பல்வேறு கட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இத்தோடு தொடர்புடைய விவரங் களைச் சேர்த்து முன்னேற்ற அறிக்கை தயாரிக்கப்படுகிறது. இப்பணிகளின் முன்னேற்றத்தை விமர்சன ரீதியாக மதிப்பிடுவதற்கும், குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு விரைவாக முன்னேறுவதற்கும் இந்த முயற்சி அரசாங்கத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது. அரசாங்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பிப்ரவரி 10 முதல் மே 20, 2022 வரை இரண்டாவது 100 நாள் நிகழ்வு செயல்படுத்தப்பட்டுள்ளது.  ஜனநாயக விழுமியங்களைத் உள்வாங்கி நாட்டின் முன்னேற்றத்திற்கும் நன்மைக்காகவும்  ஒன்றுபட்டு பாடுபடுவோம்!

சிந்தா மலையாள வாரஇதழில் இருந்து... 

தமிழில்: குறிஞ்சி ஜெனித்



 

;