tamilnadu

img

கூடலூர் - பந்தலூர் வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் வருவாய் வட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு மின்சார இணைப்பு வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில்
    நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் பந்தலூர் வருவாய் வட்டங்களில் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்கு நீண்ட காலமாக மின்சார வசதி இல்லாமல் உள்ளது. கூடலூர்- பந்தலூர் பகுதியின் ஜென்மம் நிலப்பிரச்சனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதை ஒரு காரணமாக காட்டி மின்சார இணைப்பு வழங்காமல் மறுக்கப்பட்டு வருகிறது. அடர் வனங்கள் சூழ்ந்துள்ள பகுதியில், வன விலங்குகளுக்கு மத்தியில் வாழ்கிற மக்களுக்கு மின்சார இணைப்பு என்பது மிகவும் அத்தியாவசியமானதொரு அடிப்படை தேவையாகும். மின்சார இணைப்பு இல்லாததால் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்வி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, முதியோர் மற்றும் நோயாளிகளை பராமரிப்பதும் இயலாததாக உள்ளது. 
    ஏற்கனவே, தமிழக முதல்வராக கலைஞர் அவர்கள் இருந்தபோது, அப்பகுதியில் மின்சார இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்காக பிரத்யேகமாக ஒரு உறுதிமொழி பத்திரம் பெற்று கொண்டு வழங்குமாறு உத்தரவிட்டதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டது. கடந்த சட்டமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற காரமடை கூட்டத்தில் தாங்கள் பங்கேற்று உரையாற்றும் போதும் திமுக ஆட்சி அமைந்தவுடன் கூடலூர் - பந்தலூர் மக்களுக்கு மின்சார இணைப்பு உறுதியாக வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளதால் அப்பகுதி மக்களுக்கு தங்கள் துயரம் தீர்க்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
    இந்நிலையில் தமிழக அரசு இப்பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மின்சார இணைப்பு வழங்கிட உரிய ஆவண செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

;