சென்னை, மே 30-மலைகளின் இளவரசியான கொடைக்கானல் மக்களின் வாழ்வுரிமை பறிப்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன் விவரம் வருமாறு:-சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் மலைகளின் இளவரசி கொடைக்கானல் வரும் பயணிகள் இனி இங்கு வரக்கூடாது என்கின்ற அளவுக்கு இந்தாண்டு கடுமையான மனவேதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். அரசின் சரியான திட்டமிடல் இல் லாததும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டிய கொடைக்கானல் நகர முழுமைத் திட்டம், ஆண்டுகள் பலவாக புதுப்பிக்கப்படாமல் இருந்ததுமே இதற்குக் காரணம்.இயற்கைச் சூழலைப் பாதுகாக்க கட்டட வரைமுறைகள் ஒழுங்கு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக் கப்பட்ட வழக்கில் இடைக்கால உத்தரவின்படி கொடைக்கானலில் சுமார் 450 தங்கும் விடுதிகள் மூடி சீல் வைக் கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக் கப்பட்டுள்ளது. இதனால் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் தங்குவ தற்கு இடம் இல்லாமல், தங்கள் உடமைகளுடன் சாலை ஓர நடைபாதையில் படுத்து உறங்கி, சமைத்துச் சாப்பிட்டுச் செல்லும் நிலை இருக்கிறது. கொடைக் கானல் மக்கள் மீது நீதிமன்றமும், தமிழக அரசும் இரக்கமும் கருணையும் காட்டி இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக் கூட்டி, கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.கொடைக்கானல் நகரம் 175 ஆவது ஆண்டு கொண்டாட உள்ள நிலையில், சுற்றுலாவை ஊக்குவிக்க உள்ளூர் மக்களின் ஆலோசனை களைப் பெற்று, மத்திய, மாநில அரசுகள் கூடுதல் சிறப்பு நிதி ஒதுக்கி தொலைநோக்குத் திட்டங்கள் தயாரிக்க வேண்டும்.குறிப்பாக விடுமுறை நாட்களில் விழி பிதுங்கும் போக்குவரத்து நெரிசலை சீர்செய்ய இருவழிச் சாலைகளாக விரிவாக்கம் செய்து, மையத் தடுப்புடன், பாதுகாப்பு தடுப்புச் சுவரை தரமான முறையில் அமைக்க வேண்டும். வாகனங்கள் நிறுத்த அடுக்குமாடி வாகன நிறுத்தம் போன் றவை அமைக்க வேண்டும். கொடைக்கானலிலிருந்து பெருமாள்மலை அடுக்கம் வழியாக பெரியகுளம் சாலை, கொடைக்கானல்பேரிச்சம் வழியாக மூணாறு சாலை போன்றவற்றைத் துரிதமாக செயல்படுத்த வேண்டும்.சாதாரண ஏழை எளிய சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் குறைந்த செலவில் தங்கும் விடுதிகள் கட்ட வேண்டும். பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன் பெறும் வகையில் நவீன மருத்துவமனை அமைக்க வேண்டும். தற்போது உள்ள மருத்துவ மனையின் தரம் உயர்த்த வேண்டும். விடுமுறை நாட்களில் தற்காலிக கழிப்பறைகள், நகரைச் சுத்தமாக வைத்துக் கொள்ள கூடுதல் பணியாளர் களை பணியமர்த்த சுகாதாரத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.