விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்க கள்ளக்குறிச்சி மாநாடு கோரிக்கை
கள்ளக்குறிச்சி, செப். 14- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாய மின் இணைப்பு கேட்டு மனு கொடுத்த அனைவருக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கள்ளக்குறிச்சி வட்ட 18-வது மாநாடு தியாகதுருகத்தில் தலைவர் கே.கொளஞ்சி தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலாளர் பி.தங்கராசு கொடியேற்றி வைத்தார். பி.மணி வரவேற்றார். ஜி.அருள்தாஸ் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாவட்டத் தலைவர் டி.ஏழுமலை துவக்கி வைத்தார். வட்டச் செயலாளர் பி.தெய்வீகன், பொருளாளர் எ.ராமு ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் அ.பா. பெரியசாமி வாழ்த்திப் பேசினார். மாவட்டச் செயலாளர் ஏ.வீ.ஸ்டாலின்மணி நிறைவுரையாற்றினார். தீர்மானம் விவசாயிகளின் விலைப் பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி) சட்டமாக்க வேண்டும், கூட்டுறவு துறை மூலம் வழங்கிய பயிர் கடனை கால நீட்டிப்பு வழங்க வேண்டும், கிசான் திட்டத்தின் மூலம் விடுபட்ட நபர்களுக்கு கிசான் சமன் நிதி வழங்க வேண்டும், கோவிந்தசாமிபுரம் கிராமத்தில் கோமுகி அணைக்கட்ட நிலம் கொடுத்த 300க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மாற்று இடத்திற்கு நிலப்பட்டா, மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு வட்டத் தலைவராக பி. தெய்வீகன், செயலாளர் ஜி.அருள்தாஸ், பொரு ளாளராக பி. மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.