tamilnadu

img

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை புறக்கணிப்பதா?: வைகோ, வீரமணி கண்டனம்.....

சென்னை:
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்பட்டிருப்பது கண்டனத்திற்கு உரியது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், மாநில மொழி அல்லது தாய்மொழியை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை, துணை ஆணையரின் அனுமதி பெற்று நியமித்துக் கொள்ளலாம். ஆறாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரையிலும், தேவைப்பட்டால் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் கூடக் கற்றுத் தரலாம்.பள்ளி நேரத்திலேயே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்றெல் லாம் கேந்திரிய வித்யாலயா கல்வி விதி 112 ஆம் பிரிவில் கூறப்பட்டுள்ளது.2013-14 ஆம் கல்வி ஆண்டில் இருந்து தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் இவை நடைமுறைக்கு வந்து, தமிழ்மொழி கற்பிக்கப் பட்டு வந்தது.தேர்ச்சி பெறுவதற்கு, தமிழ் பாடத்தில் தேர்வு எழுதி மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பது இல்லை. இருந்தாலும் தமிழக கேந்திரிய பள்ளிகளில் தமிழ் மொழியைக் கற்றுத்தர போதிய நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்று, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் ஆசிரியர்கள் சங்கம், கடந்த ஐந்து ஆண்டுகளாக துணை ஆணையருக்குக் கோரிக்கை வைத்து வலியுறுத்தி வந்தது.

இந்நிலையில் தற்போது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே தாய்மொழி தமிழ் பயிற்றுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதற்காக பகுதி நேர ஆசிரியர்கள் மட்டும் நியமனம் செய்யப் படுவர் என்றும், வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் தமிழ் மொழியைக் கற்பிக்கவும், அதற்குத் தேவையான ஆசிரியர்களை நிரந்தரப் பணியில் நியமனம் செய்யவும்,மற்ற பாடங்களைப் போலவே தமிழ் மொழியையும் பயிற்று விக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் என்பது தமிழ்நாட்டில் இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் தந்திரமே என்றும் வாரத்திற்கு இரண்டு தமிழ் வகுப்புகள் - பகுதி நேர ஆசிரியர்கள் என்பதெல்லாம் வெற்று அறிவிப்பு” என்றும் தெரிவித்துள்ளார்.இருமொழி கொள்கையுடைய தமிழக எடப்பாடி அரசு இதனை எதிர்க்கவேண்டும் எனவும் வீரமணி வலியுறுத்தியுள்ளார்.