tamilnadu

img

அமேசான் , ஃபிளிப்கார்ட்டில்  வேலை வாங்கி தருவதாக நூதன முறையில் பண மோசடி - எச்சரிக்கும் காவல்துறை

சென்னை : அமேசான் , ஃபிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களில் பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறி நூதன முறையில் பண மோசடி செய்யும் கும்பலிடம் சிக்கவேண்டாம் என்று சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

அமேசான் , ஃபிளிப்கார்ட் , ஷாப்பி , லசாடா போன்ற நிறுவனங்களில் பகுதி நேரம் வேலை இருப்பதாகவும், 3 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம் எனவும் அலைப்பேசி எண்ணிற்குக் குறுஞ்செய்தி ஒன்று வருகிறது . அந்த குறுஞ்செய்தியில் உள்ள இணைப்பை அழுத்தினாள் உடனடியாக ஹனி மற்றும் மேக்கிங் என்ற செயலி தானாகவே பதிவிறக்கம் செய்யப்படுகிறது.

பின்னர் , பண மோசடி காரர்கள் , வாட்சாப் மற்றும் டெலிகிராம்  மூலமாகப் பொதுமக்களிடம் தொடர்பு கொண்டு பேசி , அதிகப் பணம் சம்பாதிக்க வழிமுறைகளைக் கூறுவது போல் ஆசை வார்த்தைகளைக் கூறி , அவர்களை நம்பவும்  வைக்கின்றனர் . இதனை நம்பி பொதுமக்கள் பலர் மோசடி நபர் அளித்த வாங்கி கணக்கிற்குப் பணத்தைச் செலுத்தி ஏமாறுகின்றனர். 

இந்த மோசடியில் தற்போது வரை பொதுமக்கள் பலர் சிக்கிக்கொண்டு லட்சக்கணக்கில் பணத்தை இழந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் யாரும் இந்த பண மோசடி கும்பலிடம் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் எனவும், உடனடியாக ஹனி மற்றும் மேக்கிங் செயலியை அலைபேசியிலிருந்து அகற்றுமாறும் சென்னை காவல் துறை ஆணையர் ஷங்கர் ஜிவால் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறி வரும் எந்த குறுஞ்செய்தியையும் நம்ப வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

 

;