tamilnadu

img

சுதந்திரதின பவளவிழா... சிபிஎம் வாழ்த்து....

சென்னை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள சுதந்திர தின பவள விழா வாழ்த்துச் செய்தி வருமாறு:

இந்திய தாய்த்திருநாடு சுதந்திரதின 75-ஆவது ஆண்டு பவள விழாவைக் கொண்டாடும் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.அந்நிய ஏகாதிபத்திய அடிமை நுகத்தடியிலிருந்து இந்தியத் திருநாட்டை விடுவிப்பதற்காக தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த தியாக தீபங்கள் அனைவருக்கும் இந்நாளில் வீரவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களது லட்சியக் கனவை நிறைவேற்ற தொடர்ந்து போராடுவோம் என இந்நாளில் உறுதியேற்போம்.

பூரண விடுதலை, மொழிவழி மாநிலங்கள், பன்முகப் பண்பாடு, பொருளாதார, சமூக சமத்துவம் உள்ளிட்ட முழக்கங் களை விடுதலைப் போராட்டக் காலத்தில் முன்னெடுத்து சமர்க்களங்களை சந்தித்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள் என்கிற பெருமித உணர்வோடு விடுதலைத் திருநாளைக் கொண்டாடு வோம்.ஜனநாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, சமத்துவம், சம உரிமை, சமவாய்ப்பு உள்ளிட்ட அரசியல் சட்டத்தின் விழுமியங்களைப் பாதுகாக்க சூளுரைப்போம்.அமல்படுத்தப்படும் தாராளமய, தனியார்மய கொள்கை களால் சுதந்திரத்தின் பலன்கள் உழைப்பாளி வர்க்கத்திற்கும், ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும் கிடைப்பதற்குமாறாக, உள்நாட்டு, பன்னாட்டு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுத்து வருகின்றன. இந்திய உழைப்பாளி வர்க்கம் விவரிக்க முடியாத வேதனைகளில் விழிபிதுங்கி நிற்கிறது.பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய மக்களை அடக்கி ஆள்வதற்காக பல்வேறு கொடுங்கோல் சட்டங்களை நிறைவேற்றினார்கள். மக்களைப் பிரித்தாள்வதன் மூலம் அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள அந்நிய ஆட்சியாளர்கள் முயன்றனர். இன்றைக்கு ஒன்றிய ஆட்சிப்பொறுப்பில் அமர்ந்துள்ள ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவான பாஜக அதே பாதையில் தேசத்தின் திசைவழியை நடத்திச் செல்ல முயல்கிறது. மதச்சார்பின்மை என்ற விடுதலைப் போராட்டத்தின் விளைச்சலை சிதைத்து குறுகிய மதவெறி நோக்கு கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற முயல்கின்றனர். கூட்டாட்சிக் கோட்பாட்டைக் குலைத்து ஒற்றை அதிகாரத்தை திணிக்கின்றனர். மாநில அரசின் அதிகாரங்கள் அன்றாடம் பறிக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

வேளாண்மைக்கும் உழவர்களுக்கும் எதிரான வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திவரும் வரலாறு காணாத வீரஞ்செறிந்த போராட்டம் சுதந்திரப் போராட்டக் காலத்தை நினைவுபடுத்துகிறது. தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள், போராட்டங்கள் நாட்டிற்கு நம்பிக்கையளிக்கிறது.மொழித்திணிப்பும் பன்முகப் பண்பாட்டுச் சிதைப்பும் இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஊறுவிளைவிக்கும். இந்திய மக்கள்அனைவரும் சாதி, மதங்களைக் கடந்து ஒன்றுபட்டு போராடியதாலேயே விடுதலைக்கனவு சாத்தியமாகியது. அந்த போராட்டத்தின் விளைவாக உருவான  மாண்புகளைப் பாதுகாப்போம். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கிற சமத்துவ இந்தியாவை சமைப்பதற்காக விடுதலைப் போராட்டக் காலத்தில் கம்யூனிஸ்ட்டுகள் தொடங்கிய வீரமிகு போராட்டப் பாதையில் பீடு நடை போட இந்நாளில் உறுதியேற்போம்.

;