விழுப்புரம், மே 10-விழுப்புரம் மாவட்டம் முழுவதும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. செஞ்சி பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையின்போது புளிய மரம் முறிந்து அருகில் இருந்த கூரை வீட்டின் மீது விழுந்தது. இதில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 6 வயது சிறுமி இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தாள். அவளது தாய், அண்ணன், பாட்டி ஆகிய 3 பேர் பலத்த காயமடைந்தனர்.செஞ்சி திண்டிவனம் சாலை பகுதியை சேர்ந்தவர் குமார் (35). இவர் கூலித் தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி (30) என்ற மனைவியும், கிஷோர் (9), கீர்த்தனா (6) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர். குமார் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். ஜெயந்தி தனது குழந்தைகள் மற்றும் தாய் தனபாக்கியம் (60) ஆகியோருடன் வீட்டில் இருந்தார். அப்போது பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் வீட்டின் அருகில் இருந்த புளிய மரம் ஒன்று முறிந்து குமார் வீட்டின் மீது விழுந்தது. இதில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்தனா பரிதாபமாக உயிரிழந்தாள். ஜெயந்தி, கிஷோர், தனபாக்கியம் ஆகியோருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.