இரைப்பை குடல் மருத்துவர்கள் சங்க மாநாடு
சென்னை, அக்.8- இந்திய அறுவை சிகிச்சை இரைப்பை குடல் மருத்துவ சங்கத்தின் 35வது ஆண்டு மாநாடு, அக்டோபர் 9 முதல் 12, வரை சென்னையில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அறுவை சிகிச்சை இரைப்பை குடல் மருத்துவ முன்னாள் மாணவர் சங்கம் இந்த மாநாட்டை நடத்துகிறது அறுவை சிகிச்சை இரைப்பை குடல் மருத்துவ நிபுணர்கள், ஹெபடோபிலியரி மற்றும் ஜிஐ அறுவை சிகிச்சை நிபுணர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சர்வதேச பேராசிரியர்கள் உட்பட 1200 முதல் 1500 பிரதிநிதிகள் இதில் பங்கேற்க உள்னர். “இரைப்பை குடல் புற்றுநோயியல், புதுமைகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் அதற்கு அப்பால்” என்ற மையபொருளில் இந்தாண்டு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அதிநவீன விரிவுரைகள், அறுவை சிகிச்சை வீடியோ அமர்வுகள், குழு விவாதங்கள், சொற்பொழிவுகள், ஆய்வறிக்கை விளக்கக்காட்சிகள் மற்றும் பயிற்சி தொகுதிகள் இடம்பெறும். எண்டோஸ்கோபி, ரோபோடிக் அறுவை சிகிச்சை, வாஸ்குலர் அனஸ்டோமோசிஸ் மற்றும் சடல உறுப்பு மீட்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சிறப்பு பட்டறைகள், இளம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு விலைமதிப்பற்ற நேரடி செயல் விளக்கங்கள் அளிக்கப்படும் என்று அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரிஅறுவை சிகிச்சை இரைப்பை குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிறுவன இயக்குநரும் மாநாட்டு அமைப்புச் செயலாளருமான டாக்டர் எஸ். ஜேஸ்வந்த் கூறினார். இந்தியாவில் இரைப்பை குடல் புற்றுநோய்கள், கல்லீரல் மற்றும் கணைய நோய்கள் மற்றும் சிக்கலான இரைப்பை குடல் அறுவை சிகிச்சை கோளாறுகள் அதிகரித்து வரும் பின்னணியில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த தாகும் என்று டாக்டர் பிரகதீஸ்வரன் கூறினார்.