சென்னை:
சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
நாட்டின் காலனி ஆதிக்க விடுதலைப் போராட்டம் நிறைவடைந்த நிலையில், சென்னை மாகாணம் என்றிருந்த பகுதியில், தமிழ்பேசும் மக்களைக் கொண்ட பகுதியை பிரித்து “தமிழ்நாடு” என்று தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.மொழிவாரி மாநிலங்கள் அமையும் போது தமிழ் மொழி பேசும் மக்கள் பகுதியினைக் கொண்டு தமிழ்நாடு அமைய வேண்டியதன் அவசியத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் புகழார்ந்த தலைவர்கள் புபேஷ்குப்தா, பி.ராமமூர்த்தி, திமுக தலைவர் அண்ணா ஆகியோர் மாநிலங்களவையில் ஆற்றிய உரை ஆவணமாக பதிந்துள்ளது.
மத்திய அரசு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கும் திட்டத்தின் படி தமிழ் பேசும் மக்கள் பகுதியை பிரித்து ‘மெட்ராஸ் ஸ்டேட்’ அமைத்தது.முன்னோடி தேச விடுதலைப் போராட்ட வீரர்கள் தமிழ் பேசும் மக்கள் பகுதி முழுவதும் ‘தமிழ்நாடு’ எல்லைக்குள் வர வேண்டும் என வலியுறுத்தினர். இதன் மீது சிலம்புச் செல்வர் ம.பொ.சி., திருவிதாங்கூர் மார்ஷல், ஏ.நேசமணி போன்றோர் இயக்கம் கண்டதையும், ப. ஜீவானந்தம் உள்ளிட்ட தமிழறிஞர்களும் போராடியதையும், தியாகி சங்கரலிங்கனார் 12.07.1956 தொடங்கி 13.10.1956 வரை 75 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு உயிர் ஈகை செய்ததை நினைவு கூர்ந்து வணங்குவோம்.‘மதராஸ் ஸ்டேட்’ என்று அழைத்து வந்த பெய மாற்றி ‘தமிழ்நாடு’ என்று அழைக்கப் படும் என்று 1968 ஜூலை 18 ஆம் தேதி அறிஞர் அண்ணா அரசு அரசாணை வெளியிட்டது.தமிழ்நாடு மாநிலம் அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு அரசு பிறந்த தினமாக கொண்டாட வேண்டும் நீண்டகாலமாக வலியுறுத்தியதைத் தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ்நாடு தினம் அரசு விழாவாகக் கொண்டாடுவது என்ற அரசாணை வெளியிட்டது.இந்த நீண்ட வரலாறு கொண்ட தமிழ்நாடு பிறந்த தினத்தில், தமிழகத்தில் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு தளங்களில் சமத்துவம் மலரவும், மனிதர்களை பிளவுபடுத்தி, ஏற்றத் தாழ்வுகளை நியாயப்படுத்தும், மேன்மை, தீட்டு என கற்பிதங்களை உருவாக்கிய ‘மனுஸ்மிருதி’ யினை நிராகரிப்போம்.இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,“மத்தியில் பாஜக அரசு பெரும்பான்மை பலத்துடன் அமைந்தவுடன் இந்தியாவை ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கு முனைந்துள்ளது.பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்களின் தனித்துவ அடையாளத்தைச் சிதைத்து, வடமொழி, இந்தி ஆதிக்கத்தைத் திணித்து, மாநில அதிகரங்களைப் பறித்து, இந்து ராஷ்டிரம் எனும் கனவை நனவாக்கத் துடிக்கும் இந்துத்துவ சனாதன சக்திகளை வீழ்த்துவோம்.நாட்டின் பன்முகத்தன்மையை அழிக்கும் முயற்சியில் இறங்கி உள்ள பாஜக அரசின் சதித் திட்டங்களை வேரோடு சாய்ப்பதற்கு தமிழ்நாடு நாளில் உறுதி ஏற்போம்.தமிழ்நாட்டின் மரபு உரிமையையும், மொழி, பண்பாட்டு, உரிமை காத்திட உறுதி கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.