tamilnadu

img

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு 25ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வங்க கடலில் கலந்து வருகின்றது.  

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்கும் நிலையில் 25ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வங்க கடலில் கலந்து வருகின்றது.  

தமிழகத்தில் தற்போது பெய்துவரும் வடகிழக்கு பருவ மழையினால் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதனால் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகளில் 404 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளன. மீதமுள்ள ஏரிகளும் விரைவாக நிரம்பி வருகின்றது.  தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள ஈசூர், வாயலூர் தடுப்பணைகள் முழுவதாக நிரம்பியுள்ளது. இதனால் பாலாற்றில் வரும் 25ஆயிரத்து 300 கன அடி நீரானது முழுவதும் வங்கக் கடலில் கலந்து வருகின்றது.

தண்ணீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்  

செங்கல்பட்டு மாவட்டத்தில் ராபி பருவத்தில் விவசாயிகள் பயிர் செய்யத் துவங்கியுள்ளனர். கடந்த 15 நாட்களுக்கு முன்னர் விவசாயப் பணிகளை துவங்கி நாற்று நடவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் செங்கல்பட்டு மாவட்டத்தில் 600 ஹெக்டேர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கியிருப்பதாக கூறப்படுகின்றது.  இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சுரேசிடம் கேட்டபோது கடந்த சில தினங்களாக பருவ மழை பெய்துவரும் நிலையில் இரண்டு தினங்களாக மழை சற்று குறைவாகவே உள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன்னர் நடவு செய்யப்பட்ட விவசாயப் பயிர்கள் சுமார் 600 ஹெக்டரில் தண்ணீரில் மூழ்கியுள்ளன. தற்போது இந்த தண்ணீரும் வடியத் துவங்கியுள்ளதால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை. மேலும் சில தினங்களுக்கு மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மூன்று தினங்களுக்கு பின்னரே பாதிப்புகள் குறித்து தெரியவரும் என தெரிவித்தார்.  

தண்ணீரில் மூழ்கிய தரை பாலங்கள்  

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தரை பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பல கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு அடுத்த, குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைத்து  தேவைகளுக்கும், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர்  உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். குருவன்மேடு மற்றும் ரெட்டிப்பாளையம் ஆகிய இரு தரைப்பாலங்கள். நான்கு நாட்களாக, குருவன்மேடு-ரெட்டிபாளையம் ஆகிய இரு தரைப்பாலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், செங்கல்பட்டிலிருந்து குருவன்மேடு வரும் அரசு நகர பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது.  குருவன்மேட்டிலிருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

;