tamilnadu

img

திமுக அரசின் முதல் கூட்டத் தொடர்... ‘நீட்’ரத்துக்கு மசோதா, உழவுக்கு தனி பட்ஜெட், சச்சார் குழு பரிந்துரை ஏற்பு, சமூகநீதி, மதச்சார்பின்மையில் உறுதி.. ஆளுநர் உரையில் அறிவிப்பு...

சென்னை:
தமிழ்நாடு 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 21 திங்களன்று சென்னை கலைவாணர் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் கூடியது. இக்கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்கி வைத்து உரையாற்றி னார். திமுக ஆட்சிப்பொறுப்பிற்கு வந்த பின்னர் நடைபெறும் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இதுவாகும். 

ஆளுநர் தமது உரையின் துவக்கத்தில், “மக்களாட்சியின் கலங்கரை விளக்கமாகத் திகழும் சட்டமன்ற உறுப்பினரிடமும் எதிர்பார்க்கப்படும் கடமைகளை, ஒவ்வொருவரும் செவ்வனே நிறைவேற்றுவீர்கள் என உறுதியாக நம்புகிறேன்”என்றார். தமக்கு வாக்களித்தோர், வாக்களிக்காதோர் என்று எந்த பாரபட்சமும் இன்றி, மக்கள் அனைவருக்குமான அரசாக திமுக அரசு எப்போதும் செயல்படும் என்றும் ஆளுநர் கூறினார்.தொடர்ந்து  ஆளுநர் உரையாற்றுகையில், “மாநிலங்களுக்கு சுயாட்சி என்ற தனது தலையாய இலக்கினை எட்டவும், அரசியலமைப்புச் சட்டத்தின்வழிமுறைகளைப் பின்பற்றி உண்மை யான கூட்டாட்சித் தத்துவத்தை நிலைநிறுத்தவும், மாநில அரசு உறுதியாக உள்ளது. மாநில அரசுகள் மூலமாகவே ஒரு வலிமையான ஒன்றிய அரசை உருவாக்க முடியும். மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் உறுதியாக நிற்பதுடன், அந்த உரிமைகள் மீறப்பட்டால் அரசியலமைப்பின் துணையோடு திமுக அதைக் கடுமையாக எதிர்க்கும் என்றார்.

திமுக அரசு பதவியேற்றபோது, பெருமளவில் பாதித்திருந்த கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலை மிகப்பெரும் சவாலாக அமைந்திருந்ததையும், அரசும் முதலமைச்சரும் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டினார்.நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் வருவாயை உயர்த்த வேளாண் தொடர்புடைய செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படும்.  உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கவும் வேளாண்மைக்கென்று தனியான ஒரு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் சமூகநிலையிலும் கல்வி நிலையிலும் பின் தங்கிய மாணவர்களுக்கு நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்துஆராய்ந்து வரும் குழுவின் அறிக்கை கிடைத்ததும், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருக்கத் தேவையான சட்டங்களை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற உரிய நடவடிக்கைகள் பெறப்படும்.  69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். அரசுப் பணிகளில் ஆதிதிரா விடர், பழங்குடியினருக்கு நிரப்பப்படாதகாலியிடங்கள் சிறப்பு நியமனங்களின் மூலம் நிரப்பப்படும். சச்சார் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த அரசு திறம்பட செயல்படுத்தும்.  ஒன்றிய அரசின் இதர பிற்படுத்தப்பட் டோருக்கான இடஒதுக்கீட்டில், சமூக பொருளாதார நிலையில் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கான வருமான அளவு கோல்களை நீக்க வேண்டும். அதுவரையில், தற்போதைய வரம்பினை 8 லட்ச ரூபாயிலிருந்து 25 லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டின் நிதிநிலை கவலைக்குரியதாக இருக்கும் சூழலில், மாநி லத்தின் நிதி நிலையை மேம்படுத்துவது அரசின் தலையாய கடமையாகும். எனவே, நிதி நிலையின் தற்போதைய உண்மையான நிலையை விளக்கும் ‘வெள்ளை அறிக்கை’ ஒன்று ஜூலை மாதத்தில் வெளியிடப்படும். இதன்மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில நிதிநிலையின் விவரங்கள் முழுமையாக தெரிவிக்கப்படும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் தெரிவித்தார்.முன்னதாக, ஆளுநர் பன்வாரி லாலை பேரவைத் தலைவர் மு. அப்பாவு, செயலாளர் சீனிவாசன் ஆகியோர் வரவேற்று பேரவைக்குள் அழைத்து வந்தனர். காலை 10 மணிக்குகூட்டம் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் ஆளுநர் தனது உரையை துவக்கினார். அவரது ஆங்கில உரையை பேரவைத் தலைவர் தமிழாக்கம் செய்தார். சுமார் 11.42 மணிக்கு கூட்டம் முடிந்தது.

                                                           ***************

நல்ல தொடக்கம்....  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு... 

திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் நடந்துள்ள முதல் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை நல்ல தொடக்கம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று நடைபெறும் முதல் சட்டப்பேரவைக்கூட்டத்தில் மாநில ஆளுநர் ஆற்றிய உரை நல்ல தொடக்கம். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொடூரமான கொரோனா இரண்டாவது அலையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இச்சவாலை வெற்றிகரமாக இந்த அரசு சமாளித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது.மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரத்தை வலியுறுத்தக்கூடிய மாநிலசுயாட்சிக் கோட்பாடு முன்வைக்கப் பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 

மேலும், கொரோனா 3-வது அலை வருமேயானால் அவற்றை எதிர்கொள்ளசுகாதாரக்கட்டமைப்பை மேம்படுத்து வது, அரசு  நிர்வாகத்தில்ஊழலை ஒழித்திட லோக்ஆயுக்தாவை நடைமுறைப்படுத்துவது, மாநிலத்தில் உள்ள ஒன்றிய பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டு அனைத்து ஒன்றிய அரசு துறை நிர்வாக அலுவலகங்களில் தமிழை இணை மொழியாக பயன்படுத்த வற்புறுத்துவது மற்றும் இந்த அலுவலகங்களில் தமிழக இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோருவது, வேளாண் வளர்ச்சிக்கு நீர்ப்பாசனத்தை முறைப்படுத்திட சட்டம் கொண்டு வருவதும், தேக்கமுற்றுள்ள தொழில்துறையை முன்னேற்ற முயற்சிகளை மேற்கொள்வதும், உழவர் சந்தைகளை புனரமைப்பது என்ற முடிவும் வரவேற்க வேண்டிய நல்ல அம்சங்களாகும்.

இணைந்து குரலெழுப்புக! 

ஒன்றிய அரசின் நவீன தாராளமயக்கொள்கை, ஏற்கனவே ஆட்சியில் இருந்த அதிமுக அரசின் தவறான அணுகுமுறை உள்ளிட்ட பல காரணங்களால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிகுந்த தேக்கத்தில் உள்ளது. இத்தகைய பின்னணியில் நிதி நிலைமைஉள்ளிட்டு ஒரு வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென்று ஆளுநர் உரை  குறிப்பிட்டுள்ளது. ஒன்றிய அரசின் தவறான வரிக் கொள்கையால் பெட்ரோல் - டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் ஒட்டுமொத்த பொருட்களின் விலை களும் உயர்ந்து சாதாரண மக்கள் தலையில் சுமை அதிகரித்துள்ளது. மோடி அரசு மாநிலங்களின் வரி வருவாயை கபளீகரம் செய்து மாநிலங்களை நிதிநெருக்கடியில் சிக்க வைத்துள்ளது.  ஒன்றிய அரசின் கூட்டாட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளை எதிர்த்து தமிழக அரசு ஒத்தக்கருத்துள்ள மாநிலங் களோடு சேர்ந்து வலுவாக குரலெழுப்பிட வேண்டும்.

நீட் தேர்வால் தமிழக மருத்துவ மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை நீக்கும் வகையில் சட்டம் கொண்டு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத் தக்கது. எனினும், நீட் தேர்வு இல்லாததமிழகத்தை உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு தமிழக அரசிடம்உள்ளது என்பதையும் கவனப்படுத்து கிறோம்.அரசுப்பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி, உயர்கல்வி கணிசமான அளவிற்கு தனியார்மயமாக் கப்பட்டுள்ள பின்னணியில், சுயநிதி கல்வி நிலையங்களில் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்காத அளவிற்கு கல்விக்கட்டணங்களை அரசு தீர்மானித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கனவே, அஇஅதிமுக அரசால் நடத்தாமல் கைவிடப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப் படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். மாநிலத்திற்கு அதிக அதிகாரங்களை வலியுறுத்தும் அதேநேரத்தில் உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சியாக செயல்பட கூடுதல் அதிகாரமும், நிதியும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக்கிட நடவடிக்கை மேற்கொள் வதை வரவேற்பதோடு, தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் தமிழை பயிற்று மொழியாக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை தமிழர்களின் நலன் காத்திட ஒன்றிய அரசை வற்புறுத்திஉ யுள்ளதும் இலங்கை அகதிகளுக்கு ஒன்றிய அரசு குடியுரிமை வழங்க வேண்டுமென தமிழக அரசு கோரியுள்ளதும் இம்மக்களுக்கு புதிய நம்பிக்கையளிக்கும் செய்தியாகும்.தமிழக முதல்வர்  சில தினங்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்த போது,  நீட் தேர்வு,  புதிய கல்விக்கொள்கை, 3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற சட்டங்களையும் ஒன்றிய அரசின் கொள்கையையும் ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய அம்சங்கள் ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பது இப்பிரச்சனைகளில் மாநில அரசு உறுதியாக இருக்குமென்பதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், மாநில மக்களின் தேவைகளை ஒன்றிய அரசு நிறைவேற்றிட வேண்டுமென்றும் பிரதமரிடம் வலியுறுத்திய பல அம்சங்களும் ஆளுநர் உரையில் இடம் பெற்றுள்ளது கவனத்தில் கொள்ளத்தக்கது.மொத்தத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக அரசின் இன்றைய ஆளுநர் உரை வரவேற்கத்தக்க வகையில் உள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;