tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

அக்.28 இல் விவசாயிகள்  குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், அக். 23-   தஞ்சாவூரில், அக். 28 ஆம் தேதி தஞ்சாவூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.  இதுகுறித்து தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ப. நித்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் அக்.28 ஆம் தேதி செவ்வாய்க் கிழமையன்று காலை 10 மணி அளவில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.  இக்கூட்டத்தில், தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், ஒரத்தநாடு, பூதலூர், திருவையாறு வட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

அக்.25 இல் எரிவாயு  நுகர்வோர் குறைதீர் கூட்டம்

அரியலூர், அக். 23-  அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்திலுள்ள உடையார்பாளையம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அக்.25 அன்று நடைபெறுகிறது. மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்து எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.  எனவே, எரிவாயு நுகர்வோர்கள், சமையல் எரிவாயு தொடர்பான குறைகள் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது புகார்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

குடந்தை - நீடாமங்கலம்  இடையே புதிய  ரயில் பாதை அமைக்க கோரிக்கை

கும்பகோணம், அக். 23-  கும்பகோணத்திலிருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது நீடாமங்கலம். நீடாமங்கலத்தில் ரயில்வே சந்திப்பு அமைந்துள்ளது. எனவே கும்பகோணத்தி லிருந்து நீடாமங்கலத்திற்கு புதிய ரயில் பாதை அமைக்க சமூக ஆர் வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்பகோணத்திலிருந்து நீடா மங்கலம் செல்லும் வழியில் இடையே வலங்கைமான், ஆலங்குடி, திப்பி ராஜபுரம், திருவோணமங்கலம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு வலங்கைமானில் புகழ் பெற்ற பாடைகட்டி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனிமாதம் பாடை கட்டி திருவிழாவும், ஒவ்வொரு ஞாயிறன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்கின்றனர். கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வரை ரயில் பாதை அமைத்தால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் வரும் 2028 ஆம் ஆண்டு கும்பகோணத்தில் மகாமக திரு விழா நடைபெற உள்ளது.  இதில், உலக நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் கும்பகோணத்திற்கு வருகை தருவார்கள். லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கும்பகோணம் மகாமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணத்தில் இருந்து நீடாமங்கலம் வரை புதிய ரயில் பாதை அமைத்தால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ரயில் பயணிகள் இந்த வழித்தடத்தை பயன்படுத்தி கும்பகோணம் வந்து செல்ல மிகவும் பயனுள்ளதாக அமையும் என ரயில் உபயோகிப்பாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கல்வி கடன் சிறப்பு முகாம் 

திருச்சிராப்பள்ளி, அக். 23-  திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்வி கடன் முகாம் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக தரை தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.  திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகளும் இந்த முகாமில் பங்கேற்க உள்ளன. திருச்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகள், பிசியோதெரபி கல்லூரிகள், பி.பார்ம் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் ஐ.டி.ஐ. நிறுவனங்களில் பயின்று வரும் மாணவ- மாணவிகள் அனைவரும், மாணவர் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை, மாணவர் மற்றும் பெற்றோர் பான்கார்டு, மாணவர் சாதிச்சான்று, பெற்றோர் ஆண்டு வருமான சான்று, மாணவர் மற்றும் பெற்றோர் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப் பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், கல்விச் சான்று, கலந்தாய்வு ஆணை, கல்லூரி சேர்க்கை கடிதம், கல்லூரி கட்டண விவரம், கல்வி பயிலும் சான்று, முதல் பட்டதாரி சான்று. கடன் பெறும் வங்கியின் பெயர் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன், கல்விக் கடன் முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வடிகால் வசதி கோரி குடியிருப்பு வாசிகள் மறியல் 

பாபநாசம், அக். 23-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே, விழுதியூர் சோழன் தெருவில் தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது.  கழிவு நீரும் கலந்ததால் துர் நாற்றம் வீசியதுடன், பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், மின்சாரம் இல்லாத நிலையில் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். வடிகால் வசதி கோரி அப்பகுதி குடியிருப்பு வாசிகள், இந்தியக் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் வெங்கடேசன், ஏ.ஐ.டி.யு.சி மாநிலச் செயலாளர் தில்லை வனம் உள்ளிட்டோர் சாலை மறியலுக்கு முற்பட்டனர்.  இந்நிலையில், பாபநாசம் தாசில்தார் பழனி வேலு உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தி மறியலை கை விடச் செய்தனர்.