கள்ளக்குறிச்சியில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைத்திடுக வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி, ஆக.16- கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் ஒன்றியத்துக்குட்பட்ட களமருதூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருநாவலூர் மேற்கு ஒன்றியம் 17வது ஒன்றிய மாநாடு களமருதூரில் ஒன்றியத் தலைவர் ஏ.தங்கமணி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் டி. பரசுராமன் கொடியேற்றிவைத்தார். துணைச் செயலாளர் கே. சதீஷ்குமார் வரவேற்றார். துணை செயலாளர் கே.சக்கரவர்த்தி அஞ்சலித் தீர்மானம் வாசித்தார். மாவட்டத் தலைவர் மு.சிவக்குமார் துவக்கி வைத்தார். ஒன்றியச் செயலாளர் டி.ரகு வேலை அறிக்கை வாசித்தார். மாநாட்டை வாழ்த்தி மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம். சுந்தரவேல் பேசினார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே.பழனி பேசினார். திருநாவலூர் ஒன்றியம் களமருதூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைத்துக் கொடுக்க வேண்டும், களமருதூரில் புறக்காவல் நிலையத்தை உடனே கட்டித் தர வேண்டும், களமருதூர் ஏரிக்கரையில் இருபுறமும் மின்விளக்கு அமைக்க வேண்டும், களமருதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரம் இயங்குமாறு கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிர்வாகிகள் 13 பேர் கொண்ட ஒன்றிய குழுவிற்கு தலைவராக டி.ரகு, செயலாளராக கே.சக்கரவர்த்தி, பொருளாளராக கே.சதீஷ்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.