tamilnadu

img

மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் கோரி ஏப்.21 முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டம்

சென்னை:
ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி ஏப்ரல் 21ஆம் தேதி முதல் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் கூறியுள்ளார்.மின்வாரியத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களை படிப்படியாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று மின்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அதற்கு மாறாக, கேங்மேன் என்ற புதிய பதவியை உருவாக்கி ஒப்பந்த தொழிலாளர்களையும், வெளி ஆட்களையும் தேர்வு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளார். இத்திட்டத்தில் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், 35வயதுக்கு மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், 40 வயதுக்கு மேற்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினரும் விண்ணப்பிக்க முடியாது.

எனவே, அனல், புனல், பொது கட்டமானம், காற்றாலை மற்றும் விநியோக மின் வட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு படிப்படியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 22.2.2018 அன்று ஏற்பட்ட முத்தரப்பு ஒப்பந்தப்படி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியமே தினக்கூலியாக 380 ரூபாயை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.18) சென்னையில் உள்ள மின்வாரிய தலைமையகம் முன்பு உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன், “சென்னை வெள்ளம், கஜாபுயல் போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் சிறப்பாக பணியாற்றி நுகர்வோருக்கு தொய்வின்றி மின் இணைப்பை வழங்கியவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். அனல்மின் நிலையங்களில் முழுமையாக ஒப்பந்த தொழிலாளர்களே பணியாற்றுகின்றனர். அந்த தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு, சட்டச் சலுகைகள் எதுவும் கிடையாது.

எனவே, ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் உண்ணாநிலை போராட்டம் சென்னையில் நடைபெறுகிறது. அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் வட்ட மேற்பார்வையாளர் அலுவலங்கள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறுகிறது.  இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஏப்ரல் 21ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்புப் போராட்டம் நடைபெற உள்ளது” என்றார்.மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி. ஜெய்சங்கர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை தொடங்கி வைத்து சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் பேசினார். பொருளாளர் வெங்கடேசன், துணைப் பொதுச் செயலாளர்கள் கே. ரவிச்சந்திரன், கே. அருட்செல்வன், சென்னை வடக்கு மண்டல செயலாளர் ஆர். ரவிக்குமார், தெற்கு மண்டலச் செயலாளர் ஏ. முருகானந்தம் உள்ளிட்டோர் பேசினர்.

;