tamilnadu

img

அருந்ததியர் குடும்பத்தினர் மீது ஆதிக்க சாதியினர் தாக்குதல்

அருந்ததியர் குடும்பத்தினர் மீது  ஆதிக்க சாதியினர் தாக்குதல்

செங்கம் காவல் நிலையத்தில் சிபிஎம் புகார்

திருவண்ணாமலை, ஜூலை 12- செங்கம் அருகே, ஆதிக்க சாதியினர் நிலத்தில் குத்தகை விவசாயம் செய்த அருந்ததியர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கம் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா அரட்டவாடி பகுதியில் ஆதிக்க சமூகத்தின் நிலத்தை, அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த அசோக் குமார் குடும்பத்தினர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலத்தில் அருந்ததியர் சமூகத்தினர் விவசாயம் செய்யக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அருந்ததியர் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அருந்ததியர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களை ஆபாசமாகப் பேசி தாக்கியதுடன், அசோக்குமாரின் தம்பி அரவிந்தை கம்பத்தில் கட்டி தாக்கி கொடுமைபடுத்தினர். இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அரவிந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எ.இலட்சுமணன், எஸ்.ராமதாஸ், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சி.எம்.பிரகாஷ், சிபிஎம் தாலுகா செயலாளர் பி.கணபதி மற்றும் நிர்வாகிகள் சரவணன், கண்ணன், சுந்தரேசன், கவுண்டமணி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செங்கம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.