tamilnadu

img

விழி பிதுங்கி நிற்கும் மக்கள் மீது பேரிடி... பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு சிபிஎம் கண்டனம்...

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை என்றுமில்லாத அளவுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வரும் முன்னர் பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை வெகுவாக குறைப்போம் என தெரிவித்தனர். ஆனால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் இவற்றிற்கு நேர்மாறாக கொடுத்த வாக்குறுதிகளை எதையும் நிறைவேற்றாமல் பத்து முறை எக்சைஸ் வரி மற்றும் இதர வரிகளை உயர்த்தி பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு விலையை என்றுமில்லாத அளவிற்கு உயர்த்தி உள்ளனர். ஏற்கனவே வரலாறு காணாத விலைவாசி உயர்வால் விழிபிதுங்கி நிற்கும் மக்களுக்கு இந்த விலை உயர்வு மேலும் பேரிடியாக விழுந்துள்ளது.

பாஜக 2014இல் ஆட்சிக்கு வந்தபோது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 109 டாலராகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 71 ரூபாயும், டீசல் விலை ரூ. 57/- ஆகவும் இருந்தது. தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் 56 டாலராக குறைந்துள்ள நிலையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.90க்கு மேலாகவும், டீசல் விலை ரூ. 83 என்ற அளவிற்கும் உயர்த்தி உள்ளனர். அத்துடன் சமையல் எரிவாயு விலை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் கிட்டத்தட்ட ரூ. 300/-க்கும் மேல் உயர்த்தப்பட்டதுடன், மானியமும் முற்றாக ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மீது கடுமையாக தாக்குதல் தொடுக்கும் பாஜக அரசின் இந்நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் சங்கிலித் தொடர் போல அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் உயர்த்தி மக்களின் வயிற்றில் அடித்துள்ளது மத்திய பாஜக அரசு. இரு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனம் பயன்படுத்தும் சாதாரண மக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, பெட்ரோல் - டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை உடனடியாக குறைக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.சாமானிய ஏழை, எளிய, நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விலை உயர்வுக்கு எதிராக, ஆங்காங்கே கிளர்ச்சி இயக்கங்கள் நடத்திட வேண்டுமென கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. அனைத்துப் பகுதி மக்களும் வெகுண்டெழுந்து கண்டனக் குரலை எழுப்பிட முன்வர வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து....

;