tamilnadu

img

ரூ.5000 நிவாரணம் வழங்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர்கள் எச்சரிக்கை

சென்னை, மே 7- கொரோனா பேரிடர் மற்றும் ஊரடங்கு காரணமாக வருவாய் இழந்து, தவிக்கும் குடும்பங்களில் இடம்பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க குறைந்தபட்சம் ரூ.5000 வழங்கவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று சங்கத் தலைவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர். கருப்புச் சின்னம் அணிந்து அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டங்கள்  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் வியாழனன்று நடைபெற்றன. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் மிரட்டல் மற்றும் அடக்குமுறைகளை மீறி மாநிலம் முழுவதும் சுமார் 400 மையங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.  

குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு வட்டங்களில் 5 மையங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மாற்றுத்திறனாளிகளை கைது செய்து பின்னர் விடுவித்தனர்.  சென்னை கிண்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில தலைவர் பா.ஜான்ஸிராணி, என்.சாந்தி பங்கேற்றனர்.  டிசம்பர்-3 இயக்க தலைவர் பேரா.தீபக் கலந்து கொண்டு போராட்டத்தை வாழ்த்திப் பேசினார். எழும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சுரேந்தர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன், மாவட்டச் செயலாளர் மனோன்மணி பங்கேற்றனர். பெரம்பூர் தாலுகா அலுவலகத்தில் மாநில துணைச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன், எஸ்.கே. மாரியப்பன், மாவட்டச் செயலாளர் ராதை, தாம்பரத்தில் மாநில துணைத் தலைவர் பாரதி அண்ணா, துணைச் செயலாளர் பாபு ஆகியோரும், பழனியில் மாநிலச் செயலாளர் பகத்சிங், மதுரை பீபி குளத்தில் மாநிலச் செயலாளர் பி.ஜீவா, கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியில் மாநில துணைத் தலைவர் திருப்பதி, கோவையில் புனிதா, திருப்பூரில் ராஜேஷ், மயிலாடுதுறையில் டி.கணேசன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டங்களுக்கு தலைமை வகித்தனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் 50 மையங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை 47, தருமபுரி 32, வேலூர் 27, நாகை 24, நெல்லை 16, விழுப்புரம் 15, கடலூர் 15, ஈரோடு 15, திருவாரூர் 15, திருச்சி புறநகர்-13, மதுரை புறநகர் 13, குமரி 11, அரியலூர் 10, விருதுநகர் 10 என கூடுதலான மையங்களிலும்,  கோவை, திருப்பூர்,  சேலம், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கூடுதலான மையங்களில் இப்போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. ரூபாய் 2 லட்சம் கோடிக்கு மேல் ஆண்டுக்கு வரவு- செலவு செய்யும் தமிழக அரசு இந்தப் பேரிடர் காலத்தில் 200கோடி ரூபாய் செலவு செய்து மாற்றுத் திறனாளிகளை பாதுகாக் கக் கூடாதா என்று இந்த போராட்டத்தின்போது தலைவர்கள் கேள்வி எழுப்பினர்.

ஹெல்ப்லைன் மூலம் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளதாக சமூகநலத்துறை அமைச்சரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் தம்பட்டம் அடிப்பது உண்மைக்கு மாறானது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர். பல மாவட்டங்களில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் வேண்டுகோள் வைப்பதை ஏற்று தற்காலிகமாக இந்தப் போராட்டங்களை ஒத்தி வைக்கிறோம்.  ஆனால், மத்திய மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று நிவாரணம் ரூ.5000 உடன் வழங்காவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் எனவும் தலைவர்கள் எச்சரித்தனர்.

;