100 நாள் வேலை முழுமையாக வழங்கக்கோரி அரியாங்குப்பத்தில் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, செப்.25- 100 நாட்களுக்கும் வேலை முழுமையாக வழங்ககோரி அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் அரியாங்குப்பம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயக் கூலி தொழி லாளர்களுக்கு, முழுமையாக வேலை வழங்க வேண்டும், நாள் ஒன்றுக்கான சட்ட கூலி ரூ. 336 யை வழங்க வேண்டும், திட்டத்தில் கூறப்பட்டுள்ள 266 வகையான வேலைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகி ஜெகதீசன் முன்னிலை வகித்தார். சங்கத்தின் புதுச்சேரி மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். சிஐடியு புதுச்சேரி மாநில துணை தலைவர் ராஜாங்கம், செயலாளர் சீனுவாசன், நிர்வாகிகள் ஹரிதாஸ் விநாயகம் இன்னரசு, ஜீவானந்தம், துரைமுருகன் உள்ளிட்ட திரளான விவசாய தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக அரியாங்குப்பம் பெரியார்சிலையில் இருந்து துவங்கிய ஊர்வலம், கடலூர் சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இறுதியாக வட்டார வளர்ச்சி துறை அதிகாரி சௌந்தரி சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி, இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தலைவர்களிடம் உறுதி அளித்தார்.