tamilnadu

img

திமுக அரசின் மாநில சுயாட்சி கோட்பாட்டை சிபிஎம் வரவேற்கிறது... சட்டப் பேரவையில் நாகை மாலி பேச்சு....

சென்னை:
மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்தும் திமுக அரசின் மாநில சுயாட்சி கோட்பாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகைமாலி வலியுறுத்தினார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது செவ்வாயன்று (ஜுன்22) விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசியது வருமாறு:திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றரை மாதத்துக்குள் குறுகிய இடைவெளியில் நடைபெறும், இந்த முதல் சட்டப் பேரவைக் கூட்டத்தில் மாநில ஆளுநர் ஆற்றிய உரையை, இந்த ஆட்சியின் நல்லதொரு தொடக்கமாகவே நாங்கள் பார்க்கிறோம்.

பெரும் சவால்
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் மனித குலத்திற்கே சவாலான, கொடுமையான கொரோனா இரண்டாவது அலை என்ற சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், வெற்றிகரமாக இந்த சவாலை ஏற்று செயல்படுகிற, தமிழக அரசை மனதாரப் பாராட்டுகிறோம்.மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வேண்டுமென்கிற, மாநில சுயாட்சி கோட்பாட்டை வலியுறுத்தும் ஆளுநர் உரையை வரவேற்கிறோம். கொரோனா மூன்றாவது அலை வருமேயானால், அவற்றையும் எதிர்கொள்ளக்கூடிய சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவோம் என்கிற ஆளுநர் உரையை பாராட்டுகிறோம். அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழித்துவிட லோக் ஆயுக்தாவை நடை முறைப்படுத்துவோம் என்பதும் பாராட்டுக்குரியது.

மாநிலத்திலுள்ள ஒன்றிய பொதுத்துறை மற்றும் வங்கிகள் உள்ளிட்ட அனைத்து ஒன்றிய அரசுத்துறை அலுவலகங்களில் நம் தாய்மொழியாம் தமிழை, இணை மொழியாக பயன்படுத்த ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்பதும் ஒன்றிய அரசுஅலுவலகங்களில் தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோரப்படும் என்பதும் பாராட்டப்பட வேண்டியதாகும்.வேளாண்மை வளர்ச்சிக்கு நீர்ப்பாசனத்தை முறைப்படுத்த சட்டம் கொண்டுவரப்படும் என சொல்லப்பட்டிருப்பதும் தமிழகத்தில் தேக்க மடைந்து உள்ள தொழில்துறை முன்னேற்றத்திற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஆளுநர் உரையில் சொல்லப்பட்டுள்ள நல்ல அம்சங்களை வரவேற்கிறோம்.விவசாயிகளுக்கும் நுகர்வோரு க்கும் பயனளிக்கக்கூடிய உழவர் சந்தைகளை மேம்படுத்தும் முடிவையும் பாராட்டுகிறோம்.ஒன்றிய அரசின் நவீன தாராளமயக் கொள்கையாலும் கடந்த அதிமுக அரசின் தவறான அணுகுமுறை யால் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிகுந்த தேக்கத்தில் உள்ள இந்தச் சூழ்நிலையில், மாநில நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஆளுநர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை வரவேற்கிறோம்.

நீட் தேர்வு இல்லா மாநிலமாக்குக!
நீட் தேர்வால் பாதிப்புக்குள்ளான தமிழ்நாடு மாணவர்களின் மருத்துவ படிப்பில் பாதிப்பை களையும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில், நீட் தேர்வு இல்லாத மாநிலம் தமிழகம் என்ற நிலையை உருவாக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசிடம் உள்ளது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.கல்வித்துறையில் அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படும் என்ற ஆளுநர் அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். பள்ளிக்கல்வி, உயர்கல்வி நிலையங்கள் பெரும்பாலும் தனியார் கைகளில் உள்ளன. இக்கல்வி நிலைய கட்டணங்கள் ஏழை-எளிய மக்களை பாதிக்காத வகையில் அரசு நிர்ணயம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒன்று சேருவோம்!
ஒன்றிய அரசின் தவறான வரிக் கொள்கையால் பெட்ரோல்-டீசல் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து மக்கள் தலையில் மேலும் சுமையை கூட்டியுள்ளது. இச்சூழ்நிலையில் ஒன்றிய அரசு மாநிலங்களின் வரி வருவாயை அபகரித்து, மாநிலங்களை நிதி நெருக்கடியில் சிக்க வைத்துள்ளது. இது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது. ஆகவே, கேரளா போன்று ஒத்த கருத்துள்ள மாநில அரசுகளுடன் இணைந்து  தமிழக அரசும் ஒன்றிய அரசை வலுவாக எதிர்க்க வேண்டும்.

உள்ளாட்சிக்கு கூடுதல் நிதி தேவை!
கடந்த அதிமுக அரசால் கைவிடப்பட்ட உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வேண்டுமென வலியுறுத்துகிறோம். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகள் தன்னாட்சியாக செயல்படும் கூடுதல்அதிகாரம் மற்றும் நிதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

தாய் மொழியில் மருத்துவம்
தமிழை ஒன்றிய அலுவல் மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்பதை வரவேற்கிறோம். அதே போல் தமிழ் நாட்டில் மருத்துவம்,பொறியியல் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தமிழே பயிற்று மொழியாக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நம்பிக்கை ஒளி!
இலங்கைத் தமிழர்களின் நலனைகாத்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி உள்ளீர்கள். இலங்கை அகதிகளுக்கு ஒன்றிய அரசு குடியுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளீர்கள். இது அம்மக்களுக்கு மிகவும் நம்பிக்கை ஒளி தரும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

முதல்வரின் எதிர்பார்ப்பு!
சில தினங்களுக்கு முன்பு பிரதமரை சந்தித்த நமது முதல்வர், நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கை, 3 வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டம் ரத்து மற்றும் மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் நிறைவேற்றித் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளதும் நல்ல அம்சங்கள். இதுஆளுநர் உரையிலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது வரவேற்கக் கூடியதாகும்.

கனிமவளக் கொள்ளை
தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. மதுரை கிரானைட் கொள்ளை, தூத்துக்குடி தாது மணல் கொள்ளை போன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஐஏஎஸ் அதிகாரிகள் சகாயம், ககன்  தீப் சிங் பேடி போன்றோர்  விசாரணை செய்துள்ளனர். இது நாம் அறிந்ததே.என்றாலும், அரசு இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். சமீப காலங்களில் கட்டுமானப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது அரசு இதை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

ஏழைகளுக்கு பட்டா வழங்குக!
கோவில் நிர்வாகத்தை அரசு தொடர்ந்து ஏற்று நடத்த வேண்டும். தனியார் கைகளுக்கு இதை விட்டுவிடக்கூடாது. அதே நேரத்தில் கோவில் நிலங்களில் குடியிருக்கும் ஏழை மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்.

கல்விக்கட்டணம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசு எடுத்துக் கொண்ட பிறகும், ராஜா முத்தையா செட்டியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அரசு கட்டணம் வசூலிக்காமல் கடந்த காலங்களில் தனியார் வசம் இருந்தபோது என்ன கட்டணம் வசூலித்தார்களோ அதைப் போலவே கட்டணம் வசூலிக்கின்றனர். அரசு முறைப்படுத்த வேண்டும். விவசாயிகளின் நகைக் கடன் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. அரசு பரிசீலிக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்களின் நுண் நிதி நிறுவனங்கள் மூலம் பெற்ற கடன்கள், வங்கிக் கடன்கள் இவைகளை  ஒரு குறிப்பிட்ட காலம்வரை தள்ளிவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பாதிப்பால் மன உளைச்சலால் அவதிப்படும் கிராமப்புற பெண்களும் மாநில அரசிடமிருந்து இதையே எதிர்பார்க்கின்ற னர். ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திமுக தலைமையிலான அரசு தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நிறைவேற்ற இருக்கின்ற திட்டங்களின் வரவேற்கத் தகுந்த கொள்கை அறிக்கையாகவே  ஆளுநர் அறிக்கை அமைந்துள்ளது.இவ்வாறு நாகை மாலி பேசினார்.

;