கடலூர் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாடுகளை துரிதப்படுத்துக ஆட்சியருக்கு சிபிஎம் கோரிக்கை
கடலூர், அக்.22- பருவமழை முன்னேற்பாடு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என சிபிஎம் மாவட்ட செயலாளர் கோ.மாதவன் ஆட்சி யருக்கு மனு அனுப்பியுள்ளார். தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கழுதூரில் இடி மின்னல் தாக்கி நான்கு விவசாய தொழிலாளர்களும், ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் சுவர் இடிந்து இரண்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். 50,000 ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. விவசாய நிலங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றவும், பயிர்களைப் பாதுகாக்க ஆலோசனை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றி வடிகால் அடைப்பு களை சரிசெய்ய வேண்டும். தாழ்வான பகுதி மக்களுக்கு குடிநீர், உணவு வழங்கி மாற்று இடங்களில் தங்க வைக்க வேண்டும். நோய்களால் மக்கள் அவதிப்படுவதால் 24 மணி நேர மருத்துவ வசதியும் நடமாடும் மருத்துவக் குழுக்களும் அமைக்க வேண்டும். குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றவும் ஆறு களின் கரைகளை பலப்படுத்தவும் கோரப்பட்டுள்ளது.