tamilnadu

img

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து  கடலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடலூர், செப்.25- கடலூர் மாநகராட்சி அலுவலக வாயிலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று (செப்.25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூரில் குண்டு சாலை பகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு 272 பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்கான பணம் கட்டி ஓராண்டு கடந்தும் அதற்கான கிரைய பத்திரம் கொடுக்காமல் காலதாமதம் செய்கின்றனர். அதேபோல் முகவரியை கூட இதுவரையில் மாற்றி கொடுக்கப்படவில்லை, கடந்த வாரம் வரையில் அடுக்குமாடி குடியிருப்பு களை மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட வில்லை. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து சொத்து வரி குடிநீர் வரி கட்ட வேண்டும் என்று மாநகராட்சி சார்பாக குடியிருப்பு வாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.   கொடுக்காத தண்ணீருக்கும், எடுக்காத குப்பைக்கும், கிரையம் செய்து கொடுக்காத வீட்டிற்கும் சொத்து வரி கட்ட சொல்லும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்த போராட்டம்  நடைபெற்றது. மாநகர குழு உறுப்பினர் வி.திருமுருகன் தலைமை தாங்கினார். அருள் பிரகாஷ், பக்தவச்சலம், சக்திவேல், வில்பர் ஜோசப், தாமோதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளை செயலாளர் எஸ்.கே. தேவநாதன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.ஆளவந்தார், எஸ்.கே.பக்கிறான், மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத், மாவட்ட செயலாளர் கோ.மாதவன் உள்ளிட்டர் கலந்து கொண்டு பேசினர். பின்னர் மாநகராட்சி ஆணையர் முஜிப்பூர் ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாநகராட்சி தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார்.