tamilnadu

img

தொடரும் விஷச்சாராய மரணம்: நடிகர் சூர்யா கண்டனம்!

சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாராயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

புயல், மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில்கூட நடக்காத துயரம். இந்த விஷச்சாராயத்தால் நடந்துள்ளது, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இன்னும் தொடர்ந்து மருத்துவமனையில் இருக்கிறார்கள் எனும் தகவல் அச்சமூட்டுகிறது. அரசும், ஆட்சி நிர்வாகமும் விரைந்து செயல்பட்டு, இழப்பைக் குறைக்க போராடிக் கொண்டிருப்பது ஆறுதல் அளிப்பதாக இருந்தாலும், நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம் பலனளிக்காது.

கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் மெத்தனால் கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர் பலியானர்கள். அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில் அதே மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து கொத்து கொத்தாக மக்கள் இறந்திருக்கிறார்கள் இப்போதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம் தோறும் மறுவாழ்வு மையங்களைத் தொடங்கி அவர்களை குடிநோயிலிருந்து மீட்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல் திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கதிற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர் இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்.

அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே இனி எதிர்காலத்தில் இதுபோன்ற அவல மரணங்களைத் தடுக்கமுடியும். குறுகிய கால தீர்வை கடந்து தமிழ்நாடு முதல்வர் மதுவிலக்குக் கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுப்பார் என மக்களோடு சேர்ந்து நானும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன். சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் விஷச்சாரயத்தைத் தடுக்கத் தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் என அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.