tamilnadu

img

திருநாவலூரில் ரூ.6.48 கோடியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி தொடக்கம்

திருநாவலூரில் ரூ.6.48 கோடியில் ஊராட்சி  ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி தொடக்கம்

கள்ளக்குறிச்சி, அக்.9 – கள்ளக்குறிச்சி மாவட்டம், திரு நாவலூரில் ரூ.6.48 கோடி மதிப்பீட்டில் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தொடங்கி வைத்தார்.  ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் புதிதாகக் கட்டப்படவுள்ள திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடக் கட்டுமானப் பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த், உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கட்டடத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் மற்றும் ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் அறை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறை, கூட்டரங்கம், நிர்வாகப் பிரிவு, பொறியியல் பிரிவு, மின்தூக்கி, பாதுகாப்பு சுற்றுச்சுவர், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் எழிலுறக் கட்டப்படவுள்ளது. இப்புதியக் கட்டடத்தின் மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதியக் கட்டடம் கட்டும் நீண்டநாள் கோரிக்கையானது நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் புதியக் கட்டடக் கட்டுமானப் பணிகளை உரிய திட்ட விதிமுறைகளின்படி தரமாகவும் விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் திருநாவலூர் ஒன்றியக்குழுத் தலைவர் சாந்தி இளங்கோவன், ஒன்றியக் குழுத் துணைத் தலைவர் ராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன், நாராயணசாமி, உதவிப் பொறியாளர் மாயக்கிருஷ்ணன் மற்றும் அனைத்து உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.