மநு ஸ்மிருதி குறித்த கருத்து திருமாவளவனின் பேச்சுரிமை என்று கூறிய சென்னை உயர் நீதிமன்றம் அவர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் ஐரோப்பிய யூனியன் பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு காணொலிக் கருத்தரங்கில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மநுஸ்மிருதியில் பெண்களின் நிலை குறித்து மேற்கோள் காட்டி பேசியிருந்தார். திருமாவளவனின் கருத்தை திசைதிருப்பிய பாஜக அவர் பெண்களுக்கு எதிராக பேசியதாக புரளியை கிளப்பியது. இதையடுத்து திருமாவளவன் மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மநுஸ்மிருதியை தடைசெய்யக்கோரி திருமாவளவன் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். இதைத்தொடர்ந்து தனது சொந்த அரசியல் லாபத்துக்காக, இந்துக்களை அவமதித்ததுடன், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி, நாட்டின் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்க, நாடாளுமன்றச் செயலாளருக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த போது “பதவிப் பிரமாண உறுதி மொழியை மீறிய திருமாவளவன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாடாளுமன்றச் செயலாளருக்கு அக்டோபர் 27இல் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அதைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிராகச் செயல்பட்டு, பொது அமைதிக்குத் திருமாவளவன் குந்தகம் ஏற்படுத்தியுள்ளார்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
“தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நீதிமன்றத்தைப் பயன்படுத்த கூடாது. மநுஸ்மிருதி சட்டப் புத்தகமும் இல்லை. மநுஸ்மிருதி மொழி பெயர்ப்பு சரியா? தவறா என்பதும் தெரியாது” என்று தெரிவித்தனர்.
எந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற்று விரிவான மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தினர்.மேலும் உரிய அரசியல் சட்டப் பிரிவுகளைக் குறிப்பிட்டு மனுத்தாக்கல் செய்ய அனுமதித்தனர்.
மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து வழக்கைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.